விவசாயிகள் திருடர்களால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து திருப்பூரில் தற்காப்பு விழிப்புணர்வு கண்டன பேரணி நடைபெற்றது.
விவசாயிகளின் பணம், நகைகள், ஆடுகள், மாடுகள், மின் ஒயர்கள் என தொடர்ச்சியாக திருடப்படும் சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறை திருடர்களை பிடித்து தண்டித்தாலும், திருட்டு குறையவே இல்லை. திருட வரும்போது தடுக்கும் விவசாயிகளை படுகொலை செய்வதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
விவசாய விளைநிலங்களில் யார் வேண்டுமானாலும் வந்து மது அருந்தலாம், தட்டி கேட்கும் விவசாயிகளை வெட்டிக் கொள்ளலாம் என்ற நிலைமையும் நிலவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் கள்ளகிணற்றில் மது அருந்துவதை தட்டி கேட்ட நான்கு விவசாயிகள் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
கடந்த மாதத்தில் சேமலை கவுண்டன் பாளையத்தில் இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மூன்று அப்பாவி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தின் பின்னணி குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் மகசூலை பாதுகாப்பதற்காக விவசாய நிலத்தில் வசிக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது. திருடர்கள் தாக்குதலில் பயிற்சி பெற்றவர்களாகவும், நவீன ஆயுதங்களோடும் வருகிறார்கள். ஆனால் விவசாயிகள் நிராயுதபானிகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். தற்காப்பிற்காக கடந்த காலங்களில் விவசாயிகள் வேல்கம்பு – வீச்சருவால் – சூரிகத்தி – குத்தீட்டி உள்ளிட்டவற்றை வைத்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.
நமது உடமைகள் திருடப்படும் போது அவற்றை தடுக்கும் உரிமையும், நமது உயிர் பறிக்கப்படும் சூழ்நிலையில் தற்காப்பிற்காக திருப்பி தாக்கும் உரிமையையும் இந்திய சட்டங்கள் நமக்கு அனுமதித்துள்ளன. ஆனால் விவசாயிகள் வெள்ளந்தியாக திருடர்களை எதிர்கொள்வதால் தொடர்ச்சியாக சொத்துக்களையும் உயிர்களையும் இழந்து வருகிறார்கள்.
பாரம்பரிய தற்காப்பு முறையை மீண்டும் நாம் கையில் எடுக்க வேண்டிய அவசியத்தை திருடர்கள் மற்றும் சமூக விரோதிகள் உருவாக்கி இருக்கிறார்கள். தோட்ட வீடுகளில் வசிக்கும் விவசாயிகள் ஆபத்து நேரங்களில் உதவிக்காக அலாரம் பொருத்திக் கொள்ளுதல், வீட்டுக்குள் தற்காப்பிற்காக ஆயுதங்களை வைத்துக் கொள்ளுதல், தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளுதல், CCTV கேமரா பொருத்துதல் ஆகியவற்றின் மூலமே குறைந்தபட்சம் நமது உடைமைகளையும், உயிரையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
விவசாயிகள் சந்தனம் – செம்மரம் உள்ளிட்ட மதிப்புமிக்க மரங்களையும் வளர்த்து வருகிறார்கள். அவைகளும் தொடர்ச்சியாக திருடப்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள துப்பாக்கி உரிமம் பெறும் முறைகளை எளிமையாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட ஆயுதங்கள் தற்காப்பிற்காக மட்டுமே என்பதையும், அதை விவசாயிகள் – பொதுமக்கள் மீது எந்த நிலை வந்தாலும் உபயோகிக்க கூடாது என்கிற உறுதியையும் கடைபிடிக்க வேண்டும். விவசாயிகளை தாக்கினால் திருப்பித் தாக்குவார்கள், விவசாயிகளிடத்தில் இனிமேல் திருட முடியாது. ஆயுதங்களுடன் இருப்பார்கள். வீட்டில் அலாரம் வைத்திருப்பார்கள். அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே திருட்டுக்களை ஒழிக்க முடியும். படுகொலைகளை தடுக்க முடியும்.
எனவே விவசாயிகள் மறந்து விட்ட பாரம்பரிய தற்காப்பு முறைகளை ஊக்குவித்து – வளர்த்து – விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, விவசாயிகளின் பாரம்பரிய தற்காப்பு ஆயுதங்களான வேல்கம்பு – சூரிக்கத்தி – குத்தீட்டி ஆகியவற்றுடன் நடைபெறுவதாக இருந்த தற்காப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாநகர காவல் துறை பாரம்பரிய ஆயுதங்களோடு பேரணிக்கு அனுமதி மறுத்ததால் ஆயுதங்களின்றி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பி ஏ பி வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன பேரணி நடத்தினர்.
திருப்பூர் – பல்லடம் சாலையில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் தொடங்கிய பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
இந்த பேரணியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, மாநில பொதுச்செயலாளர் சு.முத்து விஸ்வநாதன், மாநில துணை பொதுச் செயலாளர்கள் பார்த்தசாரதி, மதுரை நேதாஜி, தென்னை விவசாயிகள் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், கோவை மாவட்ட செயலாளருமான வேலு.மந்தராச்சலம்,
கூட்டுறவு சங்க அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் குடிமங்கலம் குப்புசாமி, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மு.கோபாலகிருஷ்ணன், இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு – மனை உரிமையாளர்கள் இயக்கத்தின் மாநில பொருளாளர் பச்சையப்பன்,
சங்கத்தின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வஞ்சிப்பாளையம் நாச்சிமுத்து, மாநகர செயலாளர் ரமேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் ABT மகாலிங்கம், தெற்கு மாவட்ட நிர்வாகிகள், பி ஏ பி வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வேலுச்சாமி,
செயலாளர் முத்துராஜ் உட்பட நிர்வாகிகள், பேரணிக்கு அதரவு தெரிவித்து கொங்கு எழுச்சி பேரவை, கொங்கு புலிப்படை, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாநகர தலைவர் ரவி, தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் இமயம் சரவணன், தமிழர் தேசிய கூட்டு இயக்கம் புலவர் தமிழ் குமரன் ஆகியோர் உட்பட 400-ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தகவல்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பி ஏ பி வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கம்.