மிகவும் வருத்தமான உண்மை. தேனியின் மிகச்சிறப்பு பெற்ற மகத்தான அடையாளம் விடை பெற்று விட்டது.
பள்ளி பருவத்தில் தேனியில் இப்பொழுது இருக்கின்ற போக்குவரத்து வசதிகள் கிடையாது. தேனி வட்டார நடுத்தர சாமானிய மக்களுக்கு அன்று அறிமுகமான “எம்.ஜி ராஜா சைக்கிள் கடை” அவ்வளவு பிரபலம். தேனியின் அடையாளம் என்று எவ்வளவோ இடங்களை இன்று சொல்லலாம். ஆனால் அன்று “எம்.ஜி ராஜா சைக்கிள் கடை” தேனியில் அத்தியாவசிய அடையாளம்.
எனக்குத் தெரிந்து வாடகை சைக்கிள் கடைகள் கிளைகளாக விரிந்து ஒரு இடத்தில் சைக்கிளை வாடகைக்கு எடுத்து இன்னொரு இடத்தில் விட்டு விடலாம் என்கிற சிந்தனையை செயல்படுத்தி காட்டியவர் குரு முகமது தான். அன்றைய தேனியின் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
இந்த சைக்கிள் கடைகள் மூலம் ஏழைகளும், தொழிலாளர்களும் பெரிய அளவில் போக்குவரத்து வசதியை பெற்றனர். அதாவது தேனியில் பல இடங்களில் எம்.ஜி.ராஜா சைக்கிள் கடைகள் இருக்கும்.
ஒரு கடையில் சைக்கில் எடுத்து, நாம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்ற பின்னர், அந்த பகுதியில் உள்ள இந்த சைக்கிள் கடையில் சைக்கிள்களை விட்டு விடலாம்.
இதனால் ஒரு ரூபாய்க்கும் உட்பட்ட செலவில் ஒரு இடத்தில் சைக்கிள் எடுத்து ஓட்டிச் சென்று இன்னொரு இடத்தில் விட்டு விட முடியும். வேலைக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் பயன்படுத்தலாம்.
வெளியூரில் இருந்து வருபவர்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு எளிதில் சைக்கிளில் சென்று விட்டு, அந்த பகுதியில் உள்ள சைக்கிள் கடையில் விட்டு விடலாம். இப்படி தினமும் பல ஆயிரம் பேர் பலன் பெற்றனர். எம்.ஜி.ராஜா சைக்கிள் கடையின் கிளைகள் காலப்போக்கில் நவீன போக்குவரத்து வசதிகள் விரிவடைந்த நிலையில் சிறுக சிறுக குறைந்து முற்றிலும் இல்லாமல் போய் விட்டது.
ஆனாலும் தேனியில் வரலாற்றில் என்றென்றைக்கும் “எம்.ஜி.ராஜா சைக்கிள் கடை” எல்லோர் நினைவிலும் உயிர்ப்போடிருக்கும். “எம்.ஜி. ராஜா சைக்கிள் கடை” குரு முகமது இறைவன் அழைப்பை 28.12.2024 அன்று ஏற்றுக் கொண்டார்.
குருமுகமது இறைவன் அழைப்பினை ஏற்றாலும், தேனி மற்றும் சுற்றுக்கிராம ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் குறைந்த செலவில் அழகிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இவரது சேவை பல ஆண்டுகளுக்கு போற்றப்படும் ஒரு வரலாற்று பதிவாகவே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.