பெண்களை பயமுறுத்தி கல்வி கற்பதை அதிமுக மற்றும் பாஜகவினர் தடுத்து நிறுத்துவதாக கூறி தமிழ்நாடு மாணவர் மன்றம்- மாணவியர் பிரிவு என போஸ்டர் ஒட்டியதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தின் எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜகவினர் பல்வேறு போராட்டங்களை முன்னிறுத்தி வருகின்றனர்.
இது மட்டுமில்லாமல் கைது செய்யப்பட்ட குற்றவாளி , மற்றொருவருக்கு போன் செய்த நிலையில் அவர் யார் என்பதை காவல்துறை தெரிவிக்காமல் அதனை மறுத்து வருவதை கண்டித்து யார் அந்த சார்? என்ற போஸ்டர் அதிமுக தொழில்நுட்ப அணியினரால் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் இந்த வாசகம் முன்னிலை பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று தமிழ்நாடு மாணவர் மன்றம் மற்றும் மாணவியர் பிரிவு சார்பில் காஞ்சிபுரத்தின் நகரின் அனைத்து பகுதிகளிலும் பெண்கள் கல்வி கற்பதை தடுத்து நிறுத்தும் நோக்கில் அதிமுக பாஜக செயல்படுவதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலையின் உருவப்படங்கள் இடம் பெற்றுள்ள போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்பும் நிலையில் பொள்ளாச்சி புகழ் கள்ளக் கூட்டணி, பயமூட்டி பெண்களை படிப்பை நிறுத்த பார்ப்பதாக கூறி “#Save Girls Education” எனும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் நகர் முழுவதும் உள்ளது. அதிமுக பாஜகவிற்கு எதிராக திமுகவின் செயலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.