திருவள்ளூர் அருகே பல ஆண்டுகளாக கட்டி முடிக்காத ரயில்வே மேம்பாலம் ஆறு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று எம்பி சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நிலம் கையகப்படுத்தும் பணிகளை, துரிதப்படுத்திட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது. அப்பகுதியில் தினமும், ஆயிரக்கணக்கானோர் வேலைக்கும், மருத்துவ சிகிச்சைக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்பவர்கள் இதை கடந்து சென்று வருகின்றனர்.
மேலும் தண்டவாளத்தை கடக்கும் முயலும்போது ரயில் மோதி பலர் உயிரிழந்துள்ளனர். இந்த ரயில் தண்டவாளம் வழியாக நாள்தோறும் 250க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனையடுத்து, ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 2011ம் ஆண்டு, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், புதிய மேம்பால கட்டுமானப் பணிக்கு மட்டும் ஒப்பந்தம் விடப்பட்டு துவங்கியது. இதில், 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு துவங்கிய பணிகள் பல ஆண்டுகள் முடிவடைந்தும் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதனால், ரயில்வே மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை, ஆகிய பகுதியில் நேரில் சென்று ரயில்வே மேம்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ரயில்வே அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தின பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்பி சசிகாந்த் செந்தில் தெரிவிக்கையில், ஆறு மாதத்திற்குள் இந்த பணியானது முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், தற்போது பாழடைந்த நிலையில் உள்ள சுரங்கப்பாதையை வெகு விரைவில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதில் தெற்கு மாவட்ட தலைவர் ஆர் எம் தாஸ், மூத்த துணைத்தலைவர் வேப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சதாபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.