Close
ஜனவரி 6, 2025 6:58 காலை

பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலைகளை விரைவாக வழங்க வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்..!

கொமதேக பொதுச்செயலாளர், இ.ஆர். ஈஸ்வரன், எம்.எல்.ஏ.,

நாமக்கல் :
இலவச பொங்கல் வேட்டி, சேலைகள் இந்தாண்டு முழுமையாக பொங்கலுக்கு முன் கொடுப்பது சாத்தியமில்லை. எனவே விரைவாக கொடுப்பதற்கு துறை அமைச்சரும், அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டும், கொங்கு ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில், இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகைக்காக, பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய இலவச வேஷ்டி சேலைகள் முழுமையாக உற்பத்தி செய்ய முடியாது.

70 சதவீதம் வேட்டிகளும், 50 சதவீதம் சேலைகளுமே குறித்த நேரத்தில் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. நெசவாளர்கள் இரவு பகலாக உற்பத்தியை தொடர்ந்து கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமை அடையும் சூழல் இல்லை.

ஆர்டர்கள் தாமதமாக கொடுக்கப்பட்டு, 6 மாத காலத்திற்குள் தயாரிக்க வேண்டிய பொருட்களை 3 மாதத்திற்குள் தயாரிக்க நிர்பந்தப்படுத்துவது தான் இதற்கான காரணம்.

அதே சமயத்தில் நெசவுத் தொழிலில் லாபம் இல்லாத காரணத்தினால் பல நெசவாளர்கள் தறி இயந்திரங்களை விற்பனை செய்துவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர்.

போதுமான தறிகள் இல்லாததாலும், உற்பத்தி தாமதமாகி வருகிறது. கடந்த மே மாதத்திலேயே நூல் வாங்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தால், இந்த ஆண்டு தாமதத்தை தவிர்த்திருக்கலாம்.

தாமதமாக நூற்பாலைகளில் நூல்கள் வாங்கி, நெசவாளர்களுக்கு விநியோகித்ததும், தாமதமான உற்பத்திக்கு முக்கிய காரணமாகும். குறைந்த கால அவகாசம் கொடுத்து வேட்டி, சேலைகள் தயாரிப்பதால் அதனுடைய தரமும் கேள்விக்குறியாகிறது.

அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கலுக்கு முன் இலவச வேட்டி, சேலைகள் விநியோகிப்பது மிகவும் சிரமம். மக்களுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்கின்ற அரசு, தகுந்த நேரத்தில் முடிவெடுத்து நெசவாளர்களை தயாரிப்பில் ஈடுபடுத்தினால் மட்டும் தான், வருகின்ற காலங்களில் இதற்கு தீர்வு காண முடியும்.

உற்பத்தி செய்யப்பட்ட இலவச வேஷ்டி, சேலைகளை விரைவாக விநியோகம் செய்வதற்கு, சம்மந்தப்பட்ட அமைச்சரும், துறை அதிகாரிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டால்தான், குறைந்த தாமதத்தில் பொருட்கள் மக்களை சென்றடையும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top