உசிலம்பட்டி :
மதுரை, உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் இசைப் போட்டி நடத்தினர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டி.எம்.சௌந்தர்ராஜன் நினைவாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இசை போட்டி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முதல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இரண்டு நாட்கள் இசைப்போட்டியை, உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டி கிராமத்தில் நடத்தி வருகின்றனர்.
கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் பழைய பாடல்களை ஒலிபரப்பு செய்து அதில், சத்தமாகவும், தெளிவாகவும் ஒலிபரப்பு செய்யும் ஒலிபெருக்கி உரிமையாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து, இறுதி போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு ரொக்கம் மற்றும் கோப்பைகளை பரிசாக வழங்க உள்ளனர்.
மேலும் ,கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாது போட்டியை நடத்துவதோடு, ஒலிப்பெருக்கி அமைப்பாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க இது போன்ற போட்டிகளை நடத்துவதில் உள்ள சிக்கல்களை தளர்த்த அரசு உதவிட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.