காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகை பெற வரும் மூன்றாம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற 2025-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று சிறுகாவேரிப்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இவ் ஆய்வின்போது பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலை ஆகியவற்றின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்கள்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்காக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு வருகை புரிவதை தவிர்ப்பதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு 03.01.2025 அன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யவும், 09.01.2025 அன்று முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசு தொகுப்பு சுமூகமான முறையில் விநியோகம் செய்திட ஏதுவாக குறுவட்ட அளவில் சிறப்பு மேற்பார்வை அலுவலர்களாக, வருவாய் ஆய்வாளர்களும், வட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 1500க்கு மேல் உள்ள குடும்ப அட்டைகளைக் கொண்ட நியாயவிலைக் கடைகளுக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் சம்பந்தப்பட்ட புகார்கள் ஏதேனும் இருப்பின் அதனை 1967 மற்றும் 18004255901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவ் ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அருள் வனிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி உடனிருந்தனர்.