நாமக்கல் :
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6,000 விலை வழங்கக்கோரி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள, கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில், தி.மு.க., அரசு, 2021ல் சட்டசபை தேர்தல் அறிக்கையில், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு, ரூ. 4,000 விலை நிர்ணயம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, மாநில தலைவர் வேலுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது, கரும்பு சாகுபடிக்கு, பல்வேறு உற்பத்தி செலவினங்கள் உயர்வு காரணமாக, விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையாக, டன் ஒன்றுக்கு, ரூ. 6,000 ஆக, விலையை உயர்த்தி வழங்க வேண்டும். கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலை நிர்வாகம், ரூ. 3,151 மட்டுமே வழங்கி வருகிறது.
அதனால், கட்டுபடியாகாமல் தமிழகத்தில் விவசாயிகள் கரும்பு சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர். தற்போதுள்ள சூழ்நிலை கருத்தில் கொள்ளும்போது, கரும்பு சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையாக, 2024&25-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு, தமிழக அரசு, கரும்பு டன் ஒன்றுக்கு, ரூ. 6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
தவறும் பட்சத்தில், தமிழக சட்டசபையில் இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர் கூறினார். தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் ராஜேஸ், மாவட்டத் தலைவர் பொன்னுசாமி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.