தேனி பங்களாமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் சங்கத்தின் செயலாளர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், பொருளாளர் அ. முகமது பாட்சா முன்னிலையில் நடைபெற்றது.
கன்னியாகுமரிக் கடலின் நடுவே அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப் பெற்று 25 ஆண்டுகளானதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் வெள்ளி விழாவினைச் சிறப்பிக்கும் வகையில், அய்யன் திருவள்ளுவர் சிலையினைத் தர்ப்பூசணியில் சிற்பமாகச் செதுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
காய்கனிச் சிற்பக் கலைஞர் மு. இளஞ்செழியன் மூன்று மணி நேரத்திற்குள் தர்ப்பூசணியில் அய்யன் திருவள்ளுவர் சிலையினைச் செதுக்கி, சங்கத்தின் செயலாளர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணியிடம் வழங்கினார்.
தர்ப்பூசனியில் திருவள்ளுவர் சிற்பம் செதுக்கிய இளஞ்செழியனைப் பாராட்டி, டாக்டர் பாஸ்கரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.எம். தாமோதரன், டாக்டர் மோனிகா பிரீத்தி, செல்வ முருகதாஸ், பொன் கணேஷ் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில் பங்கேற்ற 25 நபர்களுக்கு சங்கத்தின் சார்பில் திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் கா. அய்யப்பன் நன்றி கூறினார்.