நாமக்கல் :
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் மற்றும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மோளிப்பள்ளி பஞ்சாயத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் நடத்தப்படும், ஃபிளை ஆஷ் சிமெண்ட் செங்கல் உற்பத்தி செய்யும் தொழில் மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
அப்போது, அங்கு தினசரி உற்பத்தி செய்யப்படும் செங்கல் எண்ணிக்கை, விலை மற்றும் விற்பனை விபரம், மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்றுள்ள தொழில் கடனுதவி, அரசு மானியம் மற்றும் இத்தொழில் மூலம் கிடைக்கபெறும் லாபம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், பெருங்குறிச்சி பஞ்சாயத்து மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொன்னையாறு பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் நடத்தப்பட்டு வரும் ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனங்களை கலெக்டர் பார்வையிட்டார்.
அப்போது அங்கு தயாரிக்கப்படும் துணிகளின் தரம், பணிபுரியும் மொத்த பணியாளர்கள் விபரம், ஆடைகளின் விலை மற்றும் லாப விபரம் குறித்து கேட்டறிந்தார். கொன்னையார் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான பணி கூடத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கொன்னையாறு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், வருகை தரும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், உணவுப் பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவை குறித்தும், குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை,
உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், போஷான் செயலியில் குழந்தைகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்தும், அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்து, அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வுகளில் மகளிர் திட்ட இயக்குநர்செல்வராசு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.