Close
ஜனவரி 7, 2025 10:41 மணி

விளைநிலத்தில் தண்ணீர் புகுவதால் ஆண்டுக்கு ரூ.10கோடி இழப்பு..! விவசாயிகள் வேதனை..!

சேதமான பயிர்களுடன் விவசாயிகள்

சோளங்குருணி கிராமத்தில், விளை நிலத்தில் புகுந்த நீரால் 60 ஏக்கரில் பயிரிட்ட கத்திரி வெண்டை, கடலை, மல்லிகை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை, சோளங்குருணியில், 60 ஏக்கரில் விவசாயம் செய்த 70 விவசாய குடும்பங்களின் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள விளைபயிர்கள் தண்ணீரால் சேதமடைந்துள்ளன.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோளங்குருணி கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சோளங்குருணி கண்மாயில் நிலையூர் – கம்பிக்குடி கால்வாய் மூலம் கம்பிக்குடி செல்வதற்காக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.

இதில், சோலங்குருணி கண்மாய் முழுவதும் நிரம்பிய நிலையில் கிழக்குப் பக்கம் உள்ள சுமார் 60 ஏக்கர் விவசாய நிலங்களில் நீர் புகுந்தது. இந்தப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கத்திரி, வெண்டை , கடலை மல்லிகை பூ பயிரிட்டு இருந்தனர்.

விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததால், கத்திரிக்காய் வெண்டை மற்றும் மல்லிகை பூ செடி கடலை செடி ஆகியவை நீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் போதெல்லாம் சோளங்குருணி கண்மாயில் கிழக்கு பக்கம் வடிகால் இல்லாததால், நீர் விவசாய நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர்,வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என,பல அதிகாரிகளிடமும் விவசாயிகள் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. சோளங்குருணி கிராம மக்கள் கிழக்கு பக்கம் கண்மாயில் மறுகால் பாய்வதற்கான வடிகால் அமைக்க வேண்டும் அல்லது தங்கள் விளைநிலங்களில் தண்ணீர் புகாமல் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஐந்து வருடங்களாக நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் திறக்கப்படும் தண்ணீர் தங்கள் விவசாய விளை நிலங்களில் புகுந்து விடுவதால் வாழ்வாதாம் பாதிக்கப்படுகின்றன. வருடத்திற்கு இரண்டு சாகுபடி செய்வதில் ஒரு சாகுபடி விவசாயம் செய்ய முடியாமல் பொருட்செலவும் விவசாய விளைபொருட்களும் சேதம் அடைகின்றன.

இதனைத் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சோழபுரம் நீர் கண்மாய் கிழக்கு பக்கம் பட்டா நிலங்கள் இருப்பதால் பொதுப்பணித்துறை கால்வாய் அமைக்க முடியாது என, கூறியுள்ளனர்.

ஆனால், விளை நிலங்களில் தண்ணீரால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கூறுகின்றனர். 60 ஏக்கர் பரப்பளவில் 70 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாயம் பாதிப்பதால் வருடத்திற்கு சுமார் 10 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க நிலையூர் – கம்பிக்குடி கால்வாய் நீரை கால்வாய் மூலம் முறைபடுத்தி விவசாயிகள் பாதிக்காத வண்ணம் மடை அமைத்து வெளியேற்ற வேண்டும். இதனால், சோளங்குருணி விவசாயிகள் இரண்டாம் போக விவசாயம் மூலம் ஏற்படும் இழப்பினை சரி செய்து வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top