பெரியபாளையம் அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை முடித்த பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மல்லியங்குப்பம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் காய்கறி, மலர் போன்றவை பயிரிடப்பட்டு சிறு, குறு விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டது.
சோழவரம் ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியை அருகே அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லிங்குப்பம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி புதுவாயில்- பெரியபாளையம் இடையே மல்லிங்குப்பம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராம மக்கள் தெரிவிக்கையில் தங்களது கிராம ஊராட்சியை பேரூராட்சி உடன் இணைப்பதால் ஊராட்சியில்100 நாள் வேலை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த100 நாள் வேலை திட்டத்தை மட்டுமே நம்பி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பிழப்பு நடத்தி வருவதாகவும்,திட்டம் பறிபோனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என புகார் தெரிவித்தனர்.
மேலும் சிறு குறு விவசாயிகள் அதிக அளவில் உள்ள நிலையில் நகரமயமாதலால் பாதிப்புகள் அதிகரிக்கும் என குற்றம் சாட்டினர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் சாந்தி, பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் காரணமாக புதுவாயல் – பெரியபாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.