காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் வெளியேறி சாலையில் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது என புகார் எழுந்துள்ளது.
கழிவு நீர் வெளியேறி பேருந்து நிலையத்தில் வெள்ளம்போல தேங்கிக்கிடப்பதால் அதில் இருந்து துர்நாற்றம் பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது. அதனால் பயணிகள் மூக்கைப்பிடித்தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பேரறிஞர் அண்ணா நினைவு பேருந்து நிலையம். இங்கு காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.
குறிப்பாக காஞ்சிபுரம் சுற்றுப்பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கி இருந்து நாள்தோறும் பணிக்கு சென்று வரும் நிலையில், பேருந்து நிலையத்தில் கழிவு நீர் முறையாக வெளியேறாமல் வழிந்தோடி பேருந்து நிலையம் முழுவதும் பரவலாக தேங்கி சுகாதார சீர்கேட்டினை விளைவிக்கிறது.
மேலும் பேருந்துகள் அந்நீரிலே நிற்கும் சூழ்நிலையில் பொதுமக்கள் அதில் சென்று பேருந்தில் ஏறும் நிலையம் உள்ளது.
இதனால் பேருந்து நிலையம் வரும் பொதுமக்கள் பயணிக்கும் மக்கள் என அனைவருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் வரும் நிலையில் இதுகுறித்து மாநகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
மேலும் பேருந்து நிலையம் உள்ளே சிவன் கோயில் ஒன்றும் உள்ளதால் பொதுமக்கள் கோயிலுக்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே விரைந்து காஞ்சிபுரம் மாநகராட்சி கழிவுநீர் வெளியேறு பாதையை சரி செய்து, கழிவு நீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.