நாமக்கல்:
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி, மத்திய அரசி அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அளவில் அர்ஜூனா விருது, தேசிய அளவில் விளையாட்டுகளில் சிறந்த செயல்திறனுக்காக வழங்கப்படுகிறது. இது இந்தியாவின் 2வது மிக உயர்ந்த விளையாட்டு விருதாகும்.
இந்த விருது மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அர்ஜூனாவின் வெண்கலச் சிலை, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
ஒலிம்பிக் விளையாட்டுகள், பாராலிம்பிக் விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள், காமன்வெல்த் விளையாட்டுக்கள், உலக சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையுடன் கிரிக்கெட், உள்நாட்டு விளையாட்டுகள் மற்றும் பாராஸ்போர்ட்ஸ் ஆகியவற்றில் சிறந்து வவிளங்கும் வீரர்கள் மற்றம் வீராங்கனைகளுக்கு இந்திய ஜனாதிபதியால் இந்த விருது வழங்கப்படுகிறது.
ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன், கூலி தொழிலாளி, இவரது மனைவி விஜி. இவர்களது மகள் துளசிமதி, இவர் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் கால்நடை மருத்துவம் (பி.விஎஸ்சி) 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு பாரிசில் நடந்த சர்வதேச பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் 2ம் இடம் பெற்று வெள்ளிப்பதகம் வென்றார். இவரைப்பாராட்டி தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு பரிசு வழங்கினார்கள்.
இந்த நிலையில் தற்போது, மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் துளசிமணி அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். டில்லியில் வருகிற 17ம் தேதி, நடைபெறும் விழாவில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, துளசிமதிக்கு அர்ஜுனா விருதை வழங்க உள்ளார்.
அர்ஜூனா விருதுக்கு தகுதிபெற்ற துளசிமணி இது குறித்து கூறும்போது, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், தனியார் பயிற்சி மையத்திற்கு சென்று பாட்மிட்டன் பயிற்சி பெற முடியாமல், எனது தந்தையின் ஊக்குவிப்பால் நானாகவே பயிற்சி பெற்று, பணக்காரர்கள் விளையாடும் பேட்மிண்ட்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளேன்.
தற்போது, மத்திய அரசின் உயரிய விருதான அர்ஜூனா விருதுக்கு தகுதி பெற்றுள்ளேன். இந்த விருதை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கின்றேன் என கூறினார்