Close
ஜனவரி 8, 2025 4:35 மணி

முருகனின் அறுபடை வீடு ரகசியம்..!

முருகனின் ஆறுபடை வீடு -கோப்பு படம்

சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா?

மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன.

ஆரோக்கியத்திற்கு சுவாமிமலை, உறவுக்கு திருப்பரங்குன்றம், பொருளாதார வசதிக்கு சோலைமலை, பாதுகாப்புக்கு திருச்செந்தூர், ஆளுமை திறனுக்கு திருத்தணி, ஞானம் பெற பழநி ஆகிய தலங்களை தரிசிக்கலாம்.

அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது? இதைப் புரிந்து கொள்ள நாம் நக்கீரரைத்தான் துணைக்கு அழைக்க வேண்டும். அவர்தானே தமிழில் முதன்முதலாக கடவுளைப் போற்றி நூல் எழுதியவர்.

புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள். அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள். இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.

ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.

பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.

செந்தமிழ்க் கடவுளாம் செந்திலங்கடவுளின் செம்மையான பண்புகளைப் பாராட்டி அவனிடம் அருள் பெறலாம் என்று எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை. தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.

ஆற்றுப் படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.

அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.

சரி. நக்கீரர் எந்த வரிசையில் ஆற்றுப்படை வீடுகளை பட்டியல் இடுகிறார்?

முதற் படைவீடு – திருப்பரங்குன்றம்
இரண்டாம் படைவீடு – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
மூன்றாம் படைவீடு – திருவாவினன்குடி (பழனி)
நான்காம் படைவீடு – திருவேரகம் (சுவாமிமலை)
ஐந்தாம் படைவீடு – குன்றுதோறாடல் ( திருத்தணி )
ஆறாம் படைவீடு – பழமுதிர்ச்சோலை

மேலே குறிப்பிட்டிருப்பதுதான் நக்கீரர் பாடிய ஆற்றுப்படை வீடுகளின் வரிசை. கந்தன்கருணை பாடலில் ஒவ்வொரு படைவீட்டுக்கும் சொல்லப்பட்ட முருகன் வாழ்க்கை நிகழ்வுகளை நக்கீரர் ஆற்றுப்படை வீடுகளோடு தொடர்பு படுத்தவில்லை. பின்னாளில் ஆறுபடை வீடுகளோடு முருகனின் வாழ்க்கை நிகழ்வுகளும் தொடர்புபடுத்தப்பட்டன.

காலங்கள் மாறினாலும் கருத்துகள் மாறினாலும் கந்தப் பெருமான் தமிழர்களுக்குச் சொந்தப் பெருமானாய் ஆறுபடைவீடுகளிலும் வீற்றிருந்து அன்பு மாறாமல் அருள் புரிந்து கொண்டிருக்கிறான். கால மாற்றத்தில் தமிழ்நாடு என்று மாநிலம் உருவான போதும் ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அமைந்ததும் தற்செயல் அல்ல முருகனின் தமிழ்த் தொடர்பே என்பதும் கருதத்தக்கது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரனின் ஆற்றுப்படை வீடுகளுக்கு நாமும் செல்வோம். நல்லருள் பெறுவோம்.

திருப்பரங்குன்றம்: தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

திருச்செந்தூர்: அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

பழனி: ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக் கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.
சுவாமிமலை: தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

திருத்தணி: சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

பழமுதிர்ச் சோலை: தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top