அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவி காயத்ரி.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆன வெள்ளி விழாவையொட்டி சுமார் 6 அடி உயரத்தில் நான்கு அடி அகலத்தில் 1330 திருக்குறளை எழுதியே திருவள்ளுவரை ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார்.
கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் மோகன் – ரேகா தம்பதியரின் மகள் காயத்ரி. ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாணவி காயத்ரி தனது வீட்டு சுவரில் ஓவியம் வரைவதை பொழுது போக்காக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி 1330 திருக்குறளையும், திருவள்ளுவர் ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இந்தப் படத்தை வரைய இரண்டு நாட்கள் ஆனதாகவும், தொடர்ந்து 6 மணி நேரம் வரை இதற்காக செலவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் படத்தை வரைந்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வக்கனி மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மாலா, மார்க்கரேட் ஜோஸ்மின் பிரியா, மணவாளன், சாரதா, அமிர்தலட்சுமி, சகாயபிரிட்டோ மற்றும் பள்ளி மாணவர்கள் பாராட்டினர்.