Close
ஜனவரி 8, 2025 7:49 மணி

சிவகங்கையில் வேலு நாச்சியார் பிறந்த தினம் : அமைச்சர் பங்கேற்பு..!

வேலுநாச்சியாருக்கு மரியாதை செய்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூரக்குளத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில் ,அவரது திருவுருவச்சிலைக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார் , (மானாமதுரை) எஸ்.மாங்குடி (காரைக்குடி) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, அவ்வளாகத்தில் அமைந்துள்ள வீரத்தாய் குயிலி அவர்களின் திருவுருவச்சிலை மற்றும் நினைவுச்சின்னத்திற்கும், அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசுகையில்,

இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி வெற்றி கண்டு, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதல் வீரப்பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295-வது பிறந்த நாள் விழா இன்றையதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகச்செம்மல்களை என்றென்றும் போற்றி பாதுகாக்கும் வண்ணம், நினைவு மண்டபங்கள் அமைத்து பாதுகாத்து வந்தத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆவார்கள். அவ்வழியில் சிறப்பான ஆட்சியினை தமிழகத்தில் நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் அளப்பரிய பங்கு குறித்தும், வீரர்களின் தியாகம் குறித்தும்,

போராட்டங்கள் குறித்தும், தாய்மொழியான தமிழ்மொழி குறித்தும், வீரம், கலாசாரம், பண்பாடு ஆகியவைகளில் பங்கு பெற்ற முன்னோர்களை கௌரவிக்கும் பொருட்டும், இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கா.வானதி, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், சூரக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் மலைச்சாமி மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவகங்கை சமஸ்தானம் நிர்வாகிகள், கோபால்சாமி (வேலுநாச்சியார் அறக்கட்டளை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top