விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சியில் பொம்மையாபுரம் கிராமத்தில் உள்ள சாய்நாத் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் அந்த ஆலையில் வேலை செய்துகொண்டிருந்தனர்.
பட்டாசு தயாரிக்கப் பயன்படும் ரசாயன கலவை செய்தபோது உராய்வின் காரணமாக பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் நான்கு அறைகள் இடிந்து தரைமட்டமாகின. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளை அகற்றிய பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர விபத்தில் வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவகுமார், மீனாட்சிசுந்தரம் ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.மேலும் இரண்டுபேர் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதது நெஞ்சைக் கலங்கச் செய்தது.
இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உட்பட நாலு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து ஏற்பட்டதும் தலைமறைவான பட்டாசு ஆலையின் உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டாசு ஆலையில் இரசாயனப் பொருள் கலக்கும்போது வெடிவிபத்து ஏற்பட்டதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.