காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள் மருத்துவ உதவிகளை பெறும் வகையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் பிள்ளையார்பாளையம் பகுதி மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில் உள்ள 10 க்கும் மேற்பட்ட கிராம மக்களும் சுகாதார நிலையம் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பிள்ளையார் பகுதியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் சிகிச்சை பெற வருபவர்கள் சிரமப்பட்டு வருவதாக கூறி புதிய மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசின் 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட உத்தரவிடப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 11வது வார்டு பகுதியில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான பணிகளை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கட்டுமான பணிகளின் விவரங்களை கேட்டறிந்து கட்டுமானத்தின் தரத்தையும் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி பாலமுருகன்,தேவராஜ், சண்முகநாதன்,திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.