மதுரைக்கு ஜிகர்தண்டா, மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா, பழனிக்கு பஞ்சாமிர்தம், திருச்செந்துாருக்கு ஐயங்கார் கடை வெண்பொங்கல், துாத்துக்குடிக்கு மக்ரூன், திருப்பதிக்கு லட்டு, திண்டுக்கல்லுக்கு பிரியாணி என ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் உள்ளது. தேனிக்கு என்ன தெரியுமா? ஆட்டுக்கால் சூப் தானுங்க…
தேனியில் தற்போதைய நிலையில் ஏராளமான ஆட்டுக்கால் சூப் கடைகள் உள்ளன. ஆனால் முதன் முதலாக அதாவது 27 ஆண்டுகளுக்கு முன்னரே ரோட்டோரம் ஒரு சூப் கடை தொடங்கி, அதே இடத்தில் தற்போது வரை நடத்தி வருகிறார் பூதிப்புரத்தை சேர்ந்த குமார் (50).
ஆரம்ப காலத்தில் அதாவது 27 ஆண்டுகளுக்கு முன்னர், இவரது திருமணத்திற்கு முன்னர் (இப்போது குழந்தைகளுக்கு மணம் முடித்து பேரக்குழந்தைகளை பெற்று விட்டார்). இங்கு ரோட்டோரம் சூப் கடை தொடங்கிய போது ஒரு டம்ளர் சூப் ஒரு ரூபாய்க்கு கொடுத்தார்.
சூப் மட்டுமா? ரத்தபொறியல், மூளை பொறியல், முட்டை பயறு, தலைக்கறி, ஆட்டுக்கால் கிரேவி, கப்பை கிழங்கு, குடல், முட்டை கிரேவி என பல அசைவ அயிட்டங்கள் விற்பனையும் இவரது கடையில் களை கட்டும்.
தேனியில் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து கம்பம் செல்லும் ரோட்டோரம், விஜயா அக்ரோ ஏஜன்ஸி முன்புறம், (கொட்டகுடி ஆற்று பாலத்திற்கு முன்பே, ரோட்டோரம் கிழக்கு பகுதியில்) இவர் கடை இருக்கும்.
மாலை தினமும் 4.30 மணிக்கு வியாபாரத்தை தொடங்குவார். இரவு 8 மணிக்குள் வியாபாரம் முடிந்து விடும். 27 ஆண்டுகளாக மாறாத சுவை, மாறாத இடம். எனவே நிரந்தர வாடிக்கையாளர்களே பல நுாறு பேர் உள்ளனர்.
பெரிய, பெரிய அரசியல் வி.ஐ.பி.,க்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என இவரிடம் சூப், அசைவ அயிட்டங்கள் வாங்கி சாப்பிடாதவர்களே கிடையாது என்கிற அளவிற்கு புகழ் பெற்றுள்ளார்.
காலை 5 மணிக்கு எழுந்து ஆட்டுக்கறி கடைக்கு சென்று, குடல், ரத்தம், தலைக்கறி, கால் என தனக்கு அன்றைய வியாபாரத்திற்கு தேவையான அத்தனையினையும் வாங்கி வந்து விடுவார்.
காலையிலேயே அவற்றை மிகச்சூப்பராக சுத்தப்படுத்தி, அடுப்பில் வேக வைப்பார். வேக வைத்து அப்படியே வைத்து விட்டு, மதியதிற்கு மேல் தேவையான மசாலா கலந்து ஒன்வொன்றையும் சுவையாக தயாரிப்பார்.
இவரே நேரடியாக இப்பணி செய்வதால், தான் சுவை இப்போது வரை அதாவது 27 ஆண்டுகளாகவே மாறாமல் உள்ளது. மாலை 4 மணிக்கு புறப்பட்டு, 4.30 மணிக்கு கடை திறந்து விடுவார்.
அப்போது முதல் வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். கால மாற்றத்தில் தேனியின் முகம் மாறிப்போனது. அதாவது தேனி நகர அமைப்பே தற்போது மிக நவீனமாக மாறி விட்டது.
ஆனாலும் அதே இடம் தான் குமாருக்கு. அங்கு கடை வைத்திருக்கும் அத்தனை பேரும், குமாருக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்கின்றனர். வாடிக்கையாளர்களும் அன்போடு இருக்கின்றனர்.
இப்போது உள்ள விலைவாசிக்கு ஏற்ப ஒவ்வொன்றின் விலையும் சற்று கூடியுள்ளது. ஆனாலும் பிற கடைகளின் விலையோடு ஒப்பிடுகையில் குமார் கடையில் விலை கம்மி தான். இதனால் தாராளமாக குறைந்த விலையில்… தரமான அசைவ உணவுகளை சுவைக்கலாம்.
பல வங்கிகள் இவரை அணுகி நாங்கள் கடன் தருகிறோம். நீங்கள் பெரிய கடை வையுங்கள் என கேட்டுள்ளனர். ஆனால் குமார், தயாரிப்பு அளவுகளை அதிகரித்தால், சுவையின் தரம் குறைந்து விடும்.
எனவே என்னால் எவ்வளவு முடியுமோ… அவ்வளவு மட்டும் நானே தயாரித்து விற்கிறேன். இதில் கிடைக்கும் வருமானமே போதும் என அன்புடனும், அடக்கத்துடனும் கூறி விட்டார். நீங்களும் போய் ஒருமுறை மூளைப்பொறியல், ரத்தப்பொறியல் சாப்பிட்டு விட்டு, சூப் குடிங்களேன்…..