Close
ஜனவரி 8, 2025 3:04 காலை

காஞ்சியில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் ஓட்டம்..!

25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள்..

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் மிதிவண்டி போட்டி நெடுந்தூர ஓட்டப்போட்டி என பல்வேறு வகைகளில் ஆண் பெண் என இரு பாலருக்கும் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் நேற்று மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதனை ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

பேரறிஞர் அண்ணா நினைவு நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தை துவக்கி வைத்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் பயிற்சியாளர் தாஸ்

அதனைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து நெடுந்தூர ஓட்ட போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

காலை 6 மணிக்கு துவங்கும் எனக் கூறியிருந்த நிலையில் 7:30 வரை போட்டி துவங்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலே போட்டியாளர்கள் கலந்து கொண்டதும் , துவக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அதிகாரிகள் யாரும் வராததும் என பல காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.

அதன்பின் பாதுகாப்புக்கு வந்த மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

17 வயது முதல் 25 வரை மற்றும் 25 வயதுக்கு மேல் என பெண்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரமும், ஆண்களுக்கு எட்டு கிலோமீட்டர் தூரம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருபாலருக்கும் போட்டிகள் நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணா நினைவு நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தை துவக்கி வைத்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் பயிற்சியாளர் தாஸ்

ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் 15 நபர்களில் இருந்து 40 நபர்கள் வரையே கலந்து கொண்டனர்.

17 வயது முதல் 25 வயது வரை நடைபெற்ற பெண்கள் போட்டியில் சூர்யா முதலிடத்தையும் பிரியதர்ஷினி இரண்டாம் இடத்தையும் தேன்மொழி மூன்றாம் இடம் பிடித்தனர்.

25 வயதுக்கு மேல் பெண்கள் பிரிவில் கண்மணி முதலிடத்தினையும் , ராஜராஜேஸ்வரி இரண்டாம் இடத்தையும், பவானி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

ஆண்கள் பிரிவில் சுரேஷ் முதலிடத்தையும், புவனேஸ்வரன் இரண்டாம் இடத்தையும் , கோகுல் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.

போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு மற்றும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

25 வயதுக்கு மேற்பட்ட போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இலக்கை அடைந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது.

இந்தப் போட்டிகளைக் கண்ட விளையாட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் குறைந்த அளவே வீரர்கள் கலந்து கொண்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், அண்ணா பிறந்த ஊரில் அவரது பெயரில் நடைபெறும் போட்டியில் இதுவரை இதுபோன்று குறைந்த நபர்கள் கலந்து கொண்டது விழிப்புணர்வு, விளம்பரங்கள் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாகவே தெரிகிறது எனவும் வருத்தம் தெரிவித்தனர்.

காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு நெடுந்தூர ஓட்ட போட்டியில் பங்கேற்றவர்களுக்கு இருந்த ஆர்வம் துவக்க நிகழ்விற்காக வர அதிகாரிகளுக்கு மனம் இல்லை..

கடமைக்காக நடத்தப்பட்ட நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டியா என விளையாட்டு ஆர்வலர்கள் கேள்வி..?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top