Close
ஜனவரி 7, 2025 5:36 காலை

பழங்குடி பெண்களுக்கு மூலிகைப்பண்ணை..!

மூலிகை பண்ணையின் அழகான முப்புறத் தோற்றம்

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

பெண்களின் கல்வியாகட்டும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு முன்னோடி பயிற்சி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அவ்வகையில் வாழ்ந்து காட்டுவோம் என்ற திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

உமா – மூலிகை பண்ணை குழு உறுப்பினர்

அவ்வகையில் மேல்கதிர்பூர் பகுதியில் பழங்குடியின பெண்கள் 15 நபர்களை ஒருங்கிணைத்து மூலிகை சேகரிப்பு மற்றும் மூலிகை நாற்றங்கால் தயாரித்தல் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

இதற்காக மங்கலபாடி பகுதியில் சாலையோர காட்டுப்பகுதியை தேர்வு செய்து அதனை இக்குழு சீரமைத்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சுமார் 16 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கடன் உதவி பெற்று இருநூறுக்கும் மேற்பட்ட மூலிகை செடிகள், இயற்கை காய்கறி தோட்டம், வீடு அலங்கார செடிகள், அழகு பூக்கள் செடிகள் என பல உருவாக்கி அப்பகுதியை சோலைவனம் ஆக்கி உள்ளனர்.

இன்று இந்த மூலிகை பண்ணையினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்து அவர்களுக்கு கல்வி , வேலைவாய்ப்பு , கடனுதவி என பல்வேறு தமிழக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து இதுபோன்று நாங்களும் வாழ்ந்து காட்டுவோம் என சமூகத்திற்கு கூற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பவித்ரா – செயலாளர் மூலிகை பண்ணை குழு

இதனைத் தொடர்ந்து மூலிகை பண்ணையினை பார்வையிட்டு அது குறித்து அக்குழுவினரிடம் கேட்டறிந்தார்.

இந்த மூலிகை பண்ணை குறித்து உறுப்பினர் உமா கூறுகையில் , பழங்குடியினர் என்றால் ஒரு பகுதியில் தங்க மாட்டார்கள் எனவும் உரிய தொழில் ஏதும் செய்ய மாட்டார்கள் என்ற காலம் தற்போது மாறியுள்ள நிலையில் அதனை சரியாக நாங்கள் பயன்படுத்திக் கொண்டு இந்த தொழில் குழுவை உருவாக்கி அதன் மூலம் இந்த மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளதாகவும், 200க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகள் செடிகள் மற்றும் இயற்கை காய்கறிகளை உருவாக்கி அதனை பொதுமக்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோன்று பல பகுதியில் உள்ள பழங்குடியின பெண்களுக்கும் இது போன்ற பயிற்சிகள் அளித்து அவர்களையும் வாழ்ந்து காட்டுவோம் வகையில் உருவாக்க திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இக்குழுவின் செயலர் பவித்ரா கூறுகையில் , முதலில் காடாக இருந்த இந்தப் பகுதியை இக்குழுவை சேர்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து பயன்பாடு உள்ள நிலமாக மாற்றினோம்.

அதனைத் தொடர்ந்து வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்களின் வழிகாட்டுதலிடம் இதனை செயல்படுத்தி நாங்களும் வாழ்ந்து காட்டுவோம் என தெரிவிக்கும் வகையில் செயல்படுவோம் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் குமார், வாலாஜாபாத் நகர திமுக செயலாளர் பாண்டியன், மக்கள் மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் என பல கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top