Close
ஜனவரி 7, 2025 10:15 மணி

‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் சுகாதாரத்துறை அறிவுரை..!

ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் - கோப்பு படம்

அண்டை மாநிலத்தில் தற்போது ஸ்க்ரப் டைபஸ் பரவி வருவதாலும், குளிர்காலங்களில்  இந்நோய் அதிகம் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாலும் சுகாதாரத்துறை மக்களுக்கு இவ்விழிப்புணர்வு பதிவை பகிர்ந்துள்ளது.

ஸ்க்ரப் டைபஸ்  என்பது ஒருவகை ஒட்டுண்ணி (tick mite) கடியால் ஏற்படுகின்ற காய்ச்சல் ஆகும்.  ‘ஓரியன்ஷியா சுட்சுகமுசி’ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

தொற்றுக்குள்ளான உண்ணிகள் மனிதர்களை கடிக்கும் போது தான் மனிதர்களுக்கு பரவுகிறது. வேறு வழிகளில் மனிதர்களுக்கோ, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கோ பரவுவதில்லை. தவிர, மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் உறையாடுவதாலோ, கட்டியணைப்பதாலோ தொடுதல், இருமல், தும்மல் போன்றவற்றாலோ பரவுவதில்லை.

மேலும், மனிதர்களுக்கு மட்டுமில்லை… பூனை, நாய், எலி போன்ற மனிதர்களிடம் நெருங்கி வாழும் உயிரினங்களும் பாக்டீரியா தொற்றை ஏற்படுத்துகிறது. செல்லப்பிராணிகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டாலும் கூட, மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.

நமது செல்லப்பிராணிகளில் இந்த உண்ணிகள் இருந்தால் கூட அது மனிதர்களை கடிக்க வாய்ப்புள்ளது. இந்த உண்ணிகள் கடித்த 14 நாட்களில் காய்ச்சல், குளிர் நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இருமல், உடல் முழுவதும் நெறிக்கட்டிக்கொள்ளுதல் போன்றவை ஏற்படும்.

இதனை நாம் கவனிக்காமல் விட்டு விட்டாலே, இரண்டாவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா,முளைக்கு தொற்றுபரவி கோமா, பதற்றநிலை, திடீர் சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு ஏற்படுத்தி மஞ்சள் காமாலை,மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30 சதவீதம் வரை உள்ளது.

இந்த அறிகுறி இருப்பவர்களுக்கு உண்ணி கடித்த இடத்தில், சிகரெட்டை வைத்து சுட்டதுப்போல கருப்பு நிறத்தில் உலர்ந்து போன நீள்வட்ட புண் ஏற்படும். இதனை எஸ்கர் என்று கூறுவோம். ஆகவே காய்ச்சலோடு சேர்த்து  உண்ணி கடித்ததற்கான புண் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இது பாக்டீரியா தொற்று என்பதால்  நமது அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மாத்திரைகள் மூலமாகவே முழுமையாக குணப்படுத்த முடியும்.

வீட்டிலேயே கால தாமதம் செய்யாமல், முறையாகவும், விரைவாகவும் மருத்துவரிடத்தில் சென்று கிசிச்சை செய்ய வேண்டும். குறிப்பாக வயது முதிர்ந்தோர், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் இருப்பவர்கள், ஊட்டசத்து குறைப்பாடு உடையவர்கள், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் போன்ற இணை நோய் இருப்பவர்களுக்கு இது ஏற்பட்டால், பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், உடனடி சிகிச்சை தேவை.

நம் மக்களுக்கு  இந்நோய் பற்றிய போதிய விழிப்புணர்வுடன்  தற்காப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்க வேண்டும்  என்று தெரிந்தால் என்ன நோயை முற்றிலுமாக தவிர்க்கவும், குணப்படுத்தவும் முடியும்.

  1. உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பது தான் முதல் தற்காப்பு நடவடிக்கை.
  2. தலையணை, படுக்கை விரிப்புகளை சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.
  3. வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம்.
  4. மலையேற்றத்துக்கு செல்லும் போது கொசு விரட்டி, உண்ணி விரட்டி களிம்புகளை உடலில் தேய்த்து கொள்ள வேண்டும்.
  5. தீவிர காய்ச்சல், அதீத தலைவலி, அதீத உடல் சோர்வு, எஸ்கர் என்ற புண் போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top