வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்,
பரமபத வாசல் வெள்ளி தகடுகளால் அமைக்கப்பட்டு அதில் தச அவதாரங்கள், ராமாயணம் மகாபாரத முக்கிய நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில், காஞ்சியில் பிரசித்தி பெற்ற 44வது திவ்ய தேசமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் ரங்கசாமி குளம் அருகே அமைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூபாய் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
மேலும் திருக்கோயில் பரமபத வாசல் என கூறப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலமாக அமைந்துள்ளது.
மேலும் இதில் கோயில் ராஜகோபுர வாசலும் பரமபத வாசலும் நேர் எதிர் கொண்ட திருத்தலமாக விளங்குகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு வரும் பத்தாம் தேதி அதிகாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது.
அதற்கு முன்பாக சுப்ரபாத சேவை விஸ்வரூப சேவை நிஜ பாத சேவை என பல்வேறு நிகழ்வுகளும் திருக்கோயில் சார்பாக நடைபெறுகிறது.
இந்நிலையில் வைகுந்த ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து திருக்கோயில் அறங்காவலர் தலைவர் சந்தோஷ்குமார் கூறுகையில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பிரம்மோற்சவ விழாக்கள் மட்டுமே சிறப்பாக காணப்படும் நிலையில் இந்த திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி சிறப்பு விசேஷமாக பார்க்கப்படுகிறது.
மேலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகை புரியும் நிலை உள்ளதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
முதல் முறையாக உச்சவ பெருமாளான ஸ்ரீ ஆதிகேச பெருமாள் ரத்னாங்கி அங்கி அணிந்து சேவை சாதிக்க உள்ளார்.
சொர்க்கவாசல் வழியில் உள்ள கதவுகள் வெள்ளி தகடுகளால் அழகிய சிற்ப அமைப்புகளுடன் அமைந்துள்ளது.
வைகுந்த ஏகாதசி என்று திருக்கோயில் உடபிரகாரத்தில் அனைத்து பகுதிகளிலும் சுமார் பத்து லட்சம் ரூபாய் செலவில் பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது என தெரிவித்தார்.
ராஜகோபுரம் வழி சிறியதாக இருப்பதால், பொதுமக்கள் நெரிசலின்றி செல்லும் வகையில் மூலவரை தரிசனம் செய்துவிட்டு திருக்கோவிலின் பின் வழியாக தோட்ட மண்டபத்தில் உற்சவரை தரிசித்து வெளியே செல்லும் சிறப்பு வழியும் முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்படும் எனவும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து இறையருள் பெருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது அரங்காவலர் குழு உறுப்பினர்கள் தேவிகா இளங்கோ மற்றும் செயல் அலுவலர் ராஜமாணிக்கம் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.