தென்காசி மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தில் இந்திய நாடார் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தை தென்காசி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது.
அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் குற்றாலத்தில் புகழ் மங்கும். வருடத்தில் 9 மாதங்கள் குற்றாலத்தை வைத்து தான் மாவட்டத்திற்கு வருவாய் வருகின்றது. குற்றாலத்தில் உள்ள சிறு,குறு வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதியில் பணிபுரியும் பணியாளர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே அரசு குற்றாலத்தை தென்காசி நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தை தென்காசி நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.