Close
ஏப்ரல் 16, 2025 9:11 காலை

பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் : மண்பானைகளை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை..!

பொங்கலுக்கு தயார் செய்யப்பட்டுள்ள மண்பானைகள்

பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் . மண்பாண்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்து தொழிலாளர்களை காக்க கோரிக்கை .

தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் விதமாகவும், இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது மண் அடுப்பில், பொங்கல் பானையை வைத்து பொங்கலிடுவதை பாரம்பரியமாக கொண்ட தமிழர்கள், அவசர உலகம், நாகரீக வளர்ச்சி போன்றவற்றால் பாரம்பரியத்தை மறந்து வருவது மண் பாண்டங்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களை கலக்கமடைய செய்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் சுந்தரபாண்டியபுரம், ஆழ்வார்குறிச்சி, தேன் பொத்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு, கடந்த காலங்களில் பெய்த மழை போன்றவற்றால் இந்த ஆண்டு பானை உற்பத்தி என்பது கணிசமாக குறைந்துள்ளது என்றும் உற்பத்தி செய்து வைத்திருக்கிற பானைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளதாகவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் பாரம்பரிய முறைப்படி பானையில் பொங்கலிடுவது குறைந்து கொண்டே போவதால் தமிழகத்தில் பானை விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவிற்கே அதிக அளவு பானை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மண்பானை, மண் அடுப்பு, கார்த்திகை விளக்குகள் மட்டுமே தயாரித்து வந்த தொழிலாளர்கள் தற்போது பல்வேறு வடிவங்களில் அடுப்புகள், பூந்தொட்டிகள், டம்ளர், தட்டு, குவளை, தண்ணீர் தொட்டிகள் என அடுத்த பரினாமத்திற்கு தொழிலை நகர்த்தி சென்றாலும் தமிழக மக்கள் மண்பாண்ட பொருட்களின் அருமையை உணராமல் இருப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த மழை மண்பாண்ட தொழிலை மந்தமாக்கிய நிலையில் கடந்த ஆண்டு குளங்களில் எடுத்த மண்னை கொண்டு பானை உற்பத்தியை நடத்தி வருகின்றனர். களிமண் ஒரு யூனிட் ரூ.2500-க்கும் வண்டல் மண் ஒரு யூனிட் ரூ.4000 க்கும், விறகு 1 டன் 2500-க்கும் வாங்கி பானை உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வளவு விலை கொடுத்து மன்பானையை உற்பத்தி செய்தும் பானைக்கு உரிய விலை கிடைக்காததால் தொழிலாளர்கள் அவதியுற்று வருகின்றனர். இதனால் பல்லாயிரக்கண்கான மண் பானைகள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்காது.

எனவே பொங்கல் சமயத்தில் அரசு நியாய விலைக்கடைகளில் கரும்பு, வெல்லம் போன்ற பொருட்களை வழங்குவது போல் மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் பானை, அடுப்புகளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நெசவாளர்களுக்கும் மீனவர்களுக்கு வழங்கப்படுவதை போன்று நிவாரண நிதியினை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும்.

அந்த நிதி அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்க கூடிய வகையில், அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்பாண்ட தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பதை உணர்ந்து மக்களும் பாரம்பரிய தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்பதே மண் பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top