Close
ஜனவரி 8, 2025 10:51 காலை

அய்யனார்குளம் பகுதி விவசாயிகள் அதிகாரிகள் மீது புகார்..! ஆட்சியர் நடவடிக்கை தேவை..!

சேதமான நெற்பயிர்களைக் காட்டும் விவசாயிகள்

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், அய்யனார் குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க முயற்சிப்பதாக அதிகாரிகள் மீது புகார் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அய்யனார்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த புயல் மழை காரணமாக அறுவடைக்கு முன்பே வயல்களில் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 40 ஆயிரம் செலவு செய்த நிலையில் பத்தாயிரம் கிடைப்பது சிரமம் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

வருவாய்த்துறையினர் முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அய்யனார் குளம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவனேசன் கூறுகையில்,

எனது வயல் ஐந்துக்கும் மேற்பட்ட ஏக்கர் மற்றும் அய்யனார் குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆர் சுரேஷ், ரவி, தவம், செல்லதுரை, தவமணி, மஞ்சுளா, மொக்க மாயன், தனிக்கொடி, கரிகாலன், போஸ், சுரேஷ், ஜெயபால், காந்தி, லதா, மலையான், காசி மகன் சுப்பர் தங்கமணி, முத்தன், சின்ன குறவக்குடி ஜெயம், தங்க பாண்டி, முத்தையா உள்ளிட்ட விவசாயிகள் நடவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்பே பெய்த கன மழை புயல் காரணமாக வயலில் சாய்ந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஏக்கருக்கு 40 ஆயிரம் செலவு செய்த நிலையில் 10 ஆயிரம் கிடைப்பது சிரமமாக உள்ளது. மேலும் வட்டிக்கு பணம் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் செலவு செய்த பணத்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் இருக்கிறோம். ஆனால் நஷ்டம் அடைந்த விவசாயிகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் ஒரு சிலரிடம் மட்டும் டாக்குமெண்ட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் வாங்காமல் கணக்கெடுப்பு முடிந்து விட்டதாக தகவல் கூறி விட்டு சென்றுள்ளனர். இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல். ஆகையால், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் டாக்குமெண்ட்களை வாங்கி உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் வருவாய்த்துறையினர் அய்யனார் குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் வயல்களையும் பார்வையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறுகின்றனர்.

மேலும்,விவசாயிகள் கூறுகையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அதிகாரிகள் புறக்கணிக்கும் பட்சத்தில் பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளும் நெற்கதிர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் நலன் கருதி அய்யனார்குளம் மற்றும் சின்ன குறவகுடி பகுதிகளில் சேதம் அடைந்த நெற்கதிர்களுக்கு உரிய நிவாரணங்களை சம்பந்தப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top