காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் குறுக்கே தார் சாலைகள், ஆக்கிரமிப்பு என வருடந்தோறும் அதிகரித்து வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் வேகவதி ஆறு மாயமாக வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை கொண்டு உள்ளனர்..
ஆறுகள் , ஏரிகள் நிறைந்த மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு , செய்யாறு அதற்கு அடுத்தபடியாக வேகவதி ஆறு உள்ளது.
வேகவதி ஆற்றின் மொத்த நீளம் 26 கி.மீ. தாமல் ஏரி கலங்கள் பகுதியில் தொடங்கும் வேகவதி ஆறு, காஞ்சிபுரம் நகரத்தின் வழியாகத் திம்மராஜம்பேட்டையில் உள்ள பாலாற்றில் கலக்கிறது.
வேகவதி ஆற்றிலிருந்து மஞ்சள் நீர்க் கால்வாய், அஷ்டபுஜம் கால்வாய், தேனம்பாக்கம் கால்வாய், ரெட்டைக்கால்வாய் என நான்கு கால்வாய்களாகப் பிரிந்து காஞ்சிபுரம் நகரத்தில் வருகிறது.
வேகவதி ஆற்றின் அகலம் சில இடங்களில் 500 மீட்டராகவும், ஓர் இடத்தில் 50 மீட்டராகவும் இருக்கும். ஒரு சில இடங்களில் வெறும் 5 மீட்டர்தான் இருக்கும். அவ்வளவு ஆக்கிரமிப்புகள் வேகவதி ஆற்றில் உள்ளன.
2011-ல் தகவல் அறியும் உரிமைகள் சட்டத்தின்கீழ் பொதுப்பணித் துறை கொடுத்த புள்ளிவிவரப்படி 55 ஏக்கரில் 1,798 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.
ஆனால், 4,000-க்கும் மேற்பட்ட வீடுகளின் பிடியில் வேகவதி ஆறு சிக்கித்தவிக்கிறது.
இதேபோல் கீழ்கதிர்பூர் பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே தனியார் வீட்டு மனை நிறுவனம் தார் சாலை அமைத்துள்ளதும், அப்பகுதியை சுற்றி பலர் ஆக்கிரமிப்பு செங்கல் சூளை, விவசாயம் என ஆக்கிரமித்து ஆற்றின் அளவை குறைத்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மன அளித்தும் தற்போது வரை அதற்கான விடிவுகள் இல்லை என தெரிவிக்கிறார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள வேகவதி கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை தற்போது வரை அரசியல் காரணங்களால் அகற்ற இயலாது நிலையை உள்ளது.
இதேபோன்று நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு வருடங்களில் வேகவதி ஆறு என்பது காஞ்சிபுரத்தில் இல்லை எனும் நிலை உருவாகும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.