காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறையினர் கைது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு
சாலை மறியல் போராட்டத்தினால் சிறிது நேரம் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் நீண்ட கால நிலுவைக் கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி மாவட்ட தலைவர் முத்துசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான்கேட் பகுதியில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டமானது இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாணிக்கவேல் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
இதில் தோழமை சங்கங்கள் உட்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு,
ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்பிடவும்,ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை,
தேர்வு நிலை, வரையறுக்கப்பட்டட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுப்பட்ட உரிமைகளை வழங்கிடவும், MGNREGS திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியும்,சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் போலீசார் கைது செய்யப்பட்டவர்களை வாகனங்கள் ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.