நாமக்கல் :
நாமக்கல் அருகே, தனியார் பள்ளி ஹாஸ்டலில் இருந்து விழுந்த பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் கோதை நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், பைனான்ஸ் அதிபர்.இவரது மூத்த மகன் அஜய் (17) நாமக்கல் கூலிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். அப்பள்ளி ஹாஸ்டலில் தங்கி, அந்த மாணவர் பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி ஹாஸ்டல் மாடியில் இருந்து மாணவர் அஜய் திடீரென விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அம்மாணவர் மீட்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து, நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அந்த மாணவர் ஹாஸ்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
எனினும், தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இதனிடையே தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே எனது மகன் இறப்புக்கு காரணமாகும். எனவே மகன் இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் தந்தை ராஜேந்திரன் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாணவர் இறப்பை தொடர்ந்து அசம்பாவிதம் தவிர்க்க இன்று ap பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தனியார் பள்ளி மாணவர் உயிரிழப்பு விவகாரம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.