மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் கந்தூரி நடத்துவதற்காக கடந்த வாரம் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சிலர் ஆட்டுக்கடாவுடன் சென்றனர்.
ஆனால் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை மலையேற அனுமதிக்க மறுத்தனர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முஸ்லிம் அமைப்புகள் அனுமதி கேட்டனர். அதற்கும் போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதற்கிடையில் (ஜன.05) மாலையில் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள பள்ளிவாசல் முன்பு முஸ்லிம் அமைப்பினர் மற்றும் முஸ்லிம்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இந்த தகவல் அறிந்ததும் மதுரை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் ராஜேஸ்வரி, வனிதா திருமலை குமார் உதவி போலீஸ் கமிஷனர் சசி பிரியா ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முஸ்லிம் அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்ற பின் விடுவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வழிகாட்டுதலின்படி, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பாரூக் தலைமையில், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் (ஜன.07) மனு அளித்தனர். இதில், விவசாய அணி மாநிலச் செயலாளர் சசி மற்றும் எம்.ஜே.வி.எஸ் மாநிலச் செயலாளர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது :
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான சிக்கந்தர் மலையில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலத்தில் வழிபாடு செய்து வந்த சிறுபான்மை மக்களை தடுத்து நிறுத்தும் வகையில் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் திருப்பரங்குன்ற காவல் துறையினர் அனைவரும் மக்களிடையே மத நம்பிக்கையை புரிந்து கொள்ளாமல் ஒரு சாரரின் பேச்சைக் கேட்டு கொண்டு கடந்த சில தினங்களாக சிறுபான்மை மக்கள் வழிபடுபடுவதையும், அவர்களின் நேர்த்தி கடன் செலுத்துவதையும் தடுக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர்.
830 ஆண்டுகள் சிறுபான்மை மக்களின் பழமை வாய்ந்த சிக்கந்தர் மலை வழிபாட்டுத்தலம் ஆகும். மேலும், பாரம்பரியமாக நடந்து வரும் நேர்த்திகடன் செலுத்துவது, தொழுகை நடத்துவது, சமூக பண்பாட்டு கலாசாரத்தை எவ்வித இடையூறின்றி தொடர்ந்து வழிபாடு செய்திட தாங்கள் வழி செய்திட வேண்டும் என்று, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில், மாநகர் மாவட்டச் செயலாளர் இப்ராஹிம், புறநகர் மாவட்ட பொருளாளர் சுலைமான், இளைஞரணி மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.