தமிழுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வருவோர் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் அளித்து அவர்களது தமிழ்த்தொண்டுக்குப் பெருமை செய்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை மூலமாக 17 வகையான விருதுகளுக்கு, மொழி பெயர்ப்பாளர் விருதுக்கு 10 பேர் மற்ற விருதுகளுக்குத் தலா ஒருவர் என்று மொத்தம் 26 விருதாளர்கள் தேர்வு செய்யப் பெற்றனர்.
2023 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பெற்ற விருதாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் வரவேற்புரையாற்றினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் வே. ராஜாராமன் தொடக்கவுரையாற்றினார். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினார்.
இவ்விருதுகளில் ஒன்றாக, 2018 ஆம் ஆண்டு முதல் தமிழில் அறிவியல் கருத்துகளை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவக் கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு சிங்காரவேலர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்குப் பரிசுத் தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய், ஒரு சவரன் அளவிலான தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்குவதுடன் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான சிங்காரவேலர் விருது தேனி அருகிலுள்ள பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு வழங்கப்பட்டது. தேனி மு. சுப்பிரமணி பொருளாதாரத்தில் முதுகலைப் (எம்.ஏ) பட்டமும், இதழியலில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டமும் பெற்றவர். தேனியிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் நிர்வாக மேலாளராகவும், செயலாளர் பொறுப்பில் ஒரு ஆண்டு காலமும் பணியாற்றியிருக்கிறார்.
1987 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு பத்திரிகைகளில் எழுதி வரும் இவர், தொடக்கக் காலத்தில் துணுக்குகள், சிரிப்புகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதி வந்தார். அதன் பின்னர் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டிய இவர் ஆன்மிகம், கல்வி, வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், கணினி மற்றும் இணையம் தொடர்பாக 3000-க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
முத்துக்கமலம் எனும் பெயரில் 19 ஆண்டுகளாக மின்னிதழ் ஒன்றையும் இவர் தொடர்ந்து நடத்தி வருகிறார். இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவில் 1150க்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியதுடன், 23 ஆயிரத்துக்கும் அதிகமான தொகுப்புகளையும் செய்திருக்கிறார்.
இவர் எழுதிய 10 அறிவியல் நூல்கள் உட்பட மொத்தம் 20 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. உலகப் பயன்பாட்டிலிருந்து வரும் மொழிகளில் 348 மொழிகளில் விக்கிப்பிடீயா இடம் பெற்றிருக்கிறது.
உலகிலேயே விக்கிப்பீடியா தொடர்பாக வெளியான முதல் நூல் இவருடையது தான். இந்த நூலுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்திருக்கிறது.
இதேப் போன்று ஆய்வு நெறியாளரை நேரடியாகச் சந்திக்காமல், மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டு செய்யப்பெற்ற உலகின் முதல் ஆய்வேடு எனும் சிறப்பு இவருடைய ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) ஆய்வேட்டிற்குக் கிடைத்திருக்கிறது.
தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கம், ஆட்சி மொழிச் சட்ட வார நிகழ்வுகளில் கணினியில் தமிழ் பயன்பாடு குறித்துப் பயிற்சியளித்திருக்கிறார். தமிழ் வளர்ச்சித்துறை 2012 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்திய 11 இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்வில் 10 நிகழ்வுகளில் இவர் இணையத்தமிழ் தொடர்பான பயிற்சியளித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெற்ற 50க்கும் அதிகமான கருத்தரங்குகளில் பங்கேற்று கணினி மற்றும் இணையம் தொடர்பாகப் பயிற்சியளித்திருக்கிறார்.
இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் இணைந்து நடத்திய ‘அறிவியல் பலகை’ எனும் வானொலி நிகழ்வுகளில் இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு குறித்த உரை மற்றும் அறிவியல் தொடர்பான இரு பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்ற நிகழ்வுகள் ஒலிபரப்பாகி இருக்கின்றன.
கோடை பண்பலை வானொலியில் இவருடைய இணையத் தமிழ் தொடர்பான நேர்காணல் ஒலிபரப்பாகியிருக்கிறது.
தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் இருந்து வரும் இவர் பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
தேனி நாடார் சரசுவதி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பாடத்திட்ட வல்லுநர் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியருக்கான விருது, தமிழ்நாடு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிந்தனைச் சிகரம் விருது, வடசென்னைத் தமிழ்ச் சங்கம் வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் விருது உட்பட பல்வேறு இலக்கிய அமைப்புகளின் விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.