Close
ஜனவரி 14, 2025 10:11 காலை

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு : தங்கமணி..!

பள்ளிபாளையம் நகராட்சியுடன், கிராம பஞ்சாயத்துக்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில், ப.வேலூர் எம்எல்ஏ சேகர் உள்ளிட்டோர், கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக, நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு வந்தனர்.

நாமக்கல்:

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இது குறித்து நாமக்கல்லில் அவர் கூறியதாவது:

பள்ளிபாளையம் நகராட்சியுடன் 8 கிராம பஞ்சாயத்துக்களை விதிகளுக்கு புறம்பாக இணைப்பதாக அரசு உத்தரவு வெளியிப்பட்டுள்ளது. விளைநிலங்களாக இருந்தால் அவை நகராட்சியுடன் இணைக்கப்படாது என ஏற்கனவே அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலைப் பொறுத்தவரை 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த விளைநிலங்கள் முழுவதும் குமாரபாளையம் தொகுதியில் தான் வருகிறது. எனவே அவை கிராம பஞ்சாயத்தாக தொடர வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.

இதுபோல் ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்துடன், புதுப்பாளையம் கிராம பஞ்சாயத்து மற்றும் ஓடப்பள்ளி கிராம பஞ்சாயத்தை இணைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிலும் விளைநிலங்கள் அதிகமாக உள்ளன. இதனையும் இணைக்கக்கூடாது என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி கிராம பஞ்சாயத்துக்கள் நகராட்சி, பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டால் கட்சி தலைமையின் ஒப்புதல் பேரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். பள்ளிபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 52 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டன. ஆட்சி மாற்றம் காரணமாக திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது சாயப்பட்டறை உரிமையாளர்களை சமூகவிரோதிகள் மிரட்டி பணம் பறிக்கின்றனர். மேலும், எதிர்கட்சிகள் பலமாக இல்லாத காரணத்தினால் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன என துரைமுருகன் விமர்சனம் செய்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, துரைமுருகன் திமுகவில் இருப்பதால் அப்படித்தான் கூறுவார். ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கனிப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார், அதுதான் எங்களின் கருத்து என்றார். பரமத்தி வேலூர் எம்எல்ஏ சேகர், ராகா தமிழ்மணி உள்பட திரளான அதிமுவினர் தங்கமணியுடன் சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top