Close
ஜனவரி 23, 2025 1:10 காலை

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமையான கோயிலுக்கு பாதைவிட மறுக்கும் தனியார் நிறுவனம்..!

தடுத்து நிறுத்தப்பட்ட சாமி ஊர்வலம்

மதுரை :

கிராம மக்கள் – தனியார் நிறுவனம் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையில் போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சாமி கும்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மதுரை தெற்கு தாலுகா, சோளங்குருணி கிராமத்தில் அருள்மிகு போத்தி ராஜா – வள்ளியம்மை திருக்கோயில் உள்ளது. சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் இக்கோயிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.

கடந்த 500 வருடங்களாக வண்டி பாதை வழியாக கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். இந் நிலையில், ருத்ரா ப்ரமோட்டர்ஸ் மற்றும் ஆர்.ஆர் கன்ஸ்ட்ரக்சன் ஆகிய நிறுவனம் சோளங்குருணி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவில் இடம் வாங்கி பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு ருத்ரா ப்ரமோட்டர்ஸ் மற்றும் ஆர்.ஆர். பில்டர்ஸ் அன்று முதல் வழிபாடு நடத்த தங்கள் இடத்தின் வழியாக அனுமதி அளித்துள்ளனர். ஆனால், இன்று கிராம மக்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னோட்டமாக பெட்டி சாமி வைத்து பூஜை செய்ய 100 க்கும் மேற்பட்டோர் சென்ற போது ருத்ரா பிரமோட்டர்ஸ் மேலாளர் இஸ்மாயில் பாதையில் உள்ள கதவை திறக்க மறுத்துள்ளார்.

இதனால், சோளங்குருணி மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். சோளிங்குருணி கிராம மக்கள் – மற்றும் தனியார் நிறுவனம் ஆகிய இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இது குறித்து, பெருங்குடி போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பெருங்குடி சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் போத்தி ராஜா – வள்ளியம்மாள் ஆகியோர் கோயிலுக்குச் சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர் . அதனைத் தொடர்ந்து, சோளங்குருணி கிராம மக்கள் பூஜை நடத்திக்கொள்ளலாம் என, கூறினர்.

அதனைத்தொடர்ந்து ,இரு தரப்பினரும் சமரசம் ஆகி மோதல் ஏற்படாமல் சாமி கும்பிட்டு புறப்பட்டுச் சென்றனர். தனியார் நிறுவன ஊழியர்களின் செயலால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இது குறித்து, அரசு உடனடியாக தலையிட்டு தங்களுக்கு சாமி கும்பிட பாதை ஒதுக்கித் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top