ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட் பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள்.
இக்கோயில் உற்சவர் ஆண்டு தோறும் தை மாத மக நட்சத்திரத்தன்று காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
இந்தாண்டு தை மாத மக நட்சத்திரத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் சொன்னவண்ணம் செய்த பெருமாள் சேஷ வாகனத்தில், ராஜ அலங்காரத்தில் ஆலயத்திலிருந்து புறப்பட்டார்.
திருக்கச்சி நம்பிகள் தெரு,வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெரு,சதாவரம்,அண்ணா குடியிருப்பு ஆகிய பகுதிகள் வழியாக சென்று பின்னர் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருளினார்.
வரும் வழி நெடுகிலும் பக்தர்களால் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
பாலாற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பின்னர் உற்சவர் சொன்னவண்ணம் செய்த பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளினார்.ஆலயத்துக்கு பெருமாள் வந்து சேர்ந்ததும் திருமழிசை ஆழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.