Close
ஜனவரி 22, 2025 9:55 மணி

காலம் தந்த அற்புத வாய்ப்பினை தவற விட்டாரா விஜய்?

விஜய்

ஈரோடு இடைத்தேர்தல் என்று காலம் வழங்கிய அற்புதமான வாய்ப்பினை விஜய் தவற விட்டு விட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு அவர்கள் கூறும் காரணங்களை பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர். புதிதாக கட்சி தொடங்கிய ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது.

இந்த நேரத்தில் நமது கட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டும், நமக்கு உருப்படியாக சின்னம் கூட இல்லை’ என்று பலரும் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னார்கள். ஆனால், கட்சி தொடங்கி விட்டு போட்டியிடா விட்டால் நம்மை அவமானம் செய்வார்கள். சுயேட்சை சின்னத்தில் நிற்போம் என்றே இரட்டை இலை சின்னத்தைத் தேர்ந்தெடுத்து நின்றார்.

கருணாநிதி தலைமையில் இயங்கிய அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க., காமராஜர் தலைமையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டையும் தோற்கடித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மிகப்பெரும் வெற்றி வாகை சூடினார்.

இன்று காலம் விஜய்க்கு அற்புதமான ஒரு வாய்ப்பு கொடுத்தது. ஈரோடு இடைத்தேர்தலை முக்கிய எதிர்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்து விட்டது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வும் போட்டியை புறக்கணித்து விட்டது.

ஆகவே, களத்தில் இறங்கி கணிசமான வாக்குகளை வாங்கினாலே அ.தி.மு.க., பா.ஜ., தமிழக அரசியலை விஜய்யால் புரட்டிப் போட்டிருக்க முடியும். காரணம் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் குறிப்பாக பா.ஜ., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., என அத்தனை கட்சி ஒட்டுகளும் விஜய்க்கு கிடைத்திருக்கும். காரணம் தி.மு.க.,வின் எதிர்ப்பாளர்கள் யாரும், அக்கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.

இப்படி ஒரு அரிய வாய்ப்பு கிடைத்ததை ஏன் விஜய் நழுவ விட்டார் என தமிழக அரசியல் களம் பரபரத்து கிடக்கிறது. ஆனால், அப்படியொரு அரிய வாய்ப்பை சீமானுக்குக் கொடுத்து விட்டு தேர்தல் களத்தில் இருந்து வெளியேறி விட்டார் விஜய். இப்படி ஒரு அற்புத வாய்ப்பு விஜய்க்கு இனி அரசியல் களத்தில் கிடைக்குமா? விஜய்யின் இந்த முடிவு நிச்சயம் தமிழக அரசியல் களத்திற்கே மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top