Close
ஜனவரி 22, 2025 6:06 மணி

தாராபட்டியில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் அவதி..!

பழுதாகி நின்ற பேருந்து

சோழவந்தான்:

சோழவந்தான் அடுத்து உள்ள தாராப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தாராபட்டி கிராமத்திற்கு காலை ஏழு முப்பது மணிக்கு வந்த அரசு பேருந்து டிஎன் 58 என் 2457 எண் கொண்ட 26 ஹெச் பேருந்து தாராப்பட்டி ஊருக்குள் வந்தபோது பழுதாகி நின்றதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் கிராமத்தில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாராப்பட்டியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள மேலக்கால் கோச்சடை மெயின் ரோட்டிற்கு வந்து அங்கிருந்து பெரியார் பேருந்து செல்லும் பேருந்துகளில் செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால் தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இது போன்று அரசு பேருந்து கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பழுதாகி நிற்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்,

2024 டிசம்பர் 30க்குள் பழைய பேருந்துகளை நிறுத்திவிட்டு மாற்றாக அந்த வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இதுகுறித்து போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டால் பழைய பேருந்துகளை மாற்றுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. விரைவில் பேருந்துகள் மாற்றப்படும் என்று கூறினார்.

மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே பேருந்துகள் பழுதாகி நிற்பது தொடர்கதையாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்களிடையே போக்குவரத்துக் கழகம் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆகையால் அரசு உடனடியாக பழுதடைந்த பழைய பேருந்துகளை மாற்றி விட்டு புதிய பேருந்துகளை பணிமனைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top