திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்தமேல் கொண்டையார் கிராமப் பகுதியில் தனியார்க்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த சுமார் 300.க்கு மேற்பட்ட தொழிலாளிகள் குடும்பத்துடன் தங்கி செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 19.ஆம் தேதி அன்று ஒடிசா மாநிலம்,பலாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ராமகிருஷ்ணா தியாகு என்பவர் கடுமையான வயிற்றுப்போக்கு,வாந்தி, மயக்கம், காய்ச்சல் காரணத்தினால் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இன்று அதே மாவட்டத்தை சார்ந்த அல்தர் சந்தா என்பவர் செங்கல் சூளையில் உயிரிழந்தார். இத் தகவலை அறிந்த வெங்கல் காவல்துறையினரும், சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செங்கல் சூளையில் பலருக்கும் இதே நிலைமை இருப்பதால் அவர்களை பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து சுகாதாரத் துறையினர் இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு நான்கு மாத குழந்தை ஒன்று இதே செங்கல் சூளையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தாமரைப்பாக்கம்,மாகரல், பூச்சி அத்திப்பட்டு, திருக்கண்டஉள்ள வெளியூர், அழிஞ்சுவாக்கம், கிளாம்பாக்கம், கல்மேடு, காவனூர், கரலப்பாக்கம், ஆரணி அடுத்த பனப்பாக்கம், வடக்கு நல்லூர், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் 100.க்கும் மேற்பட்ட செங்கல் தயாரிக்கும் சூலைகளில் சுமார்20,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அந்த இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதா? எவ்வளவு தொழிலாளர்கள் என கணக்கெடுத்து, அவர்கள் பணி ஆற்றி அவர்களின் சொந்த மாநிலத்திற்கு செல்லும் வரையில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்களை நடத்தி பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகள் அழைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தச்சம்பவத்தால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தாங்கள் சொந்த மாநிலத்திற்கு கிளம்பத் தொடங்கியுள்ளனர். மேலும் இது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.