காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கலந்து கொண்டு தலைக்கவசம் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி விழிப்புணர்வு நோட்டீஸ்களை அளித்தார்.
மேலும் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த நபர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் ஜெயவேலு , போக்குவரத்து காவல் ஆய்வாளர் லோகநாதன், உதவி ஆய்வாளர்கள் ஏகாம்பரம் ,பூங்குன்றம் , கிரி உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இருசக்கர வாகன ஓட்டுகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டக்கூடாது, நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், வளைவில் முந்தக் கடாது, சிக்னல் விளக்குகளை கவனித்து வாகனங்களை ஓட்ட வேண்டும்,
சாலையில் செல்லும்போது சாகசங்கள் மற்றும் விபரீத விளையாட்டுகள் கூடாது, வேகத்தடைகளை கடக்கும் போது மெதுவாக செல்ல வேண்டும் , இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் மட்டுமே செல்ல வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது போன்றவை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் மருத்துவர் ரவி கூறும்போது, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமையினால் கண் இமைக்கும் நேரத்தில் சாலை விபத்துகள் நடக்கின்றது.
வாகன ஓட்டிகளிடம் பொறுப்புணர்வு இல்லாததாலும், கவனச் சிதறலாலும், சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்காததாலும், போதையில் வாகனம் ஓட்டுவதாலும், அவசரம், அலட்சியம் போன்றவற்றாலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 25 சதவீத வாகன விபத்துகள் நடக்கின்றது என கூறினார்.
அதேபோல், சாலைகளின் மோசமான நிலையாலும் பல சமயங்களில் விபத்துகள் நிகழ்வதுண்டு. நெடுஞ்சாலைகளிலும் நகர்ப்புறச் சாலைகளிலும் உரிய பாதுகாப்பு, எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்படாததும் விபத்துக்கு காரணமாகிறது. வாகனங்களின் தரமும், அவற்றின் வேகமும் கூட விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றன.
ஓட்டுநர் உரிமம் இல்லாத எந்த நபரையும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கக் கூடாது. 18 வயதுக்கு குறைந்த மாணவர்கள் வாகனங்கள் இயக்கி விபத்து ஏற்படும் பட்சத்தில், சட்டத்தின் பிடியில் பெற்றோர் சிக்கி தண்டிக்கப்படுவர் என்பதை உணர வேண்டும் என்றார்.
மருத்துவர்கள் பயிற்சி செவிலியர்கள் என 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு ரயில்வே சாலை, பேருந்து நிலையம், சேக்குப்பேட்டை நடுத்தெரு வழியாக மருத்துவமனையை வந்தடைந்தது.