சோழவந்தான் :
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன்பட்டி பிரிவு அருகில் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திறந்த வெளி நீர்நிலைப் பகுதிகளில் கொட்டுவதால் குடிநீரில் விஷத்தன்மை பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை தாமோதரம்பட்டி செல்லும் பிரிவு அருகே உள்ள நீர்நிலை ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதன் அருகிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இது குறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் வாடிப்பட்டி யூனியன் தனி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.