நாமக்கல் :
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் எமன் வேடம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது.
தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம், கடந்த ஜன. 1 முதல் ஒரு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. தினமும், பொதுமக்களுக்கு சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, வட்டார போக்குவரத்து துறையினர், மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர் என பல்வேறு அரசுத்துறையினர் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, மாவட்ட போக்குவரத்து காவல் துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்றது.
போலீஸ் ஏ.எஸ்.பி. ஆகாஷ் ஜோஷி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சாலை விபத்துகளை தடுக்க எமதர்மராஜா, சித்ரகுப்தர், எம்.ஜி.ஆர்., வேடம் அணிந்த மாவட்ட நாடக நடிகர் சங்க கலைஞர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த நபர் விபத்தில் அடிபட்டு, சாலையில் ரத்தம் சொட்ட சொட்ட உயிரிழந்து சடலமாக கிடப்பது போல் தத்ரூரமாக நடத்துக் காட்டினார்.
தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் டூ வீலர் ஒட்டிச் சென்றவர்களை நிறுத்தி, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை எமதர்ம ராஜா வேடமணிந்தவர் பாசக்கயிறு கொண்டு இழுப்பதுபோல் நடித்து, ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது. போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், எஸ்.ஐ.க்கள் குணசிங், வெங்கடேசன், போலீஸ் எஸ்.ஐ. தியாகராஜன், மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவர் ஆட்டோ ராஜா, செயலார் சுமதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.