சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியும் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் :
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பத்தரசன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சக்தி சோமையா (வயது 14), தந்தை கைலாசம். இந்த மாணவன் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் 24ம் தேதி பிற்பகல் பள்ளியின் மின்சார வயர்களில் ஏற்பட்ட மின்சார கசிவினால் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் சக்தி சோமையாவின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மேலும், இவ்விபத்தில் உயிரிழந்த மாணவன் சக்தி சோமையாவின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.