நாமக்கல் :
போக்குவரத்து விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் டூ வீலர் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா ஜன. 1 முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு இருந்து விபத்தில்லாத பயணத்தை உறுதி செய்யும் வகையில், ஹெல்மெட் அணிந்து டூ வீலர் பேரணி துவங்கியது. மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முக்கிய ரோடுகளின் வழியாக சென்ற ஊர்வலம், நாமக்கல் சேலம் ரோட்டில் லாரி உரிமையாளர்கள் சங்க திடலில் நிறைவு பெற்றது.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து துறைச் சார்பில் கடந்த 1ம் தேதி முதல் பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் துண்டு பிரசுரம் வழங்குதல், சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வாகனங்களில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டுதல், டிரைவர்களுக்கு புத்தாக்க பயிற்ச்சி வழங்குதல்,
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் அனைத்து அரசு துறைகளின் சார்பிலும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என அவர் கூறினார். நிகழ்ச்சியில், ஏஎஸ்பி ஆகாஷ்ஜோசி, ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், ஆர்டிஓக்கள் உள்ளிட்ட போலீஸ் மற்றும் போக்குரவத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.