தமிழகத்தில், 13 மாவட்டங்களில், புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.
தமிழகத்தில், 30 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்க, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய ஒப்புதலை, நீர்வளத்துறை பெற்றுள்ளது. இதில், 12 இடங்களில் மட்டுமே மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன.
இந்த குவாரிகளில், ஒப்பந்ததாரர்கள் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதில், 4,730 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமல் மணல் கொள்ளை அடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால், அதில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது, அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் சிக்கிய 12 குவாரிகள் மூடப்பட்டன.
இதற்கு மாற்றாக, புதிய மணல் குவாரிகளை திறக்காததால், கட்டுமான பணிக்கு ஆற்று மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை சார்ந்துள்ள மணல் லாரி உரிமையாளர்கள், பணியாளர்கள், கட்டுமான துறையினர் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சுற்றுச்சூழல் அனுமதி உள்ள வேறு இடங்களில், புதிய மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என, கட்டுமான துறை, லாரி உரிமையாளர்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன்படி, புதிய குவாரிகளை திறக்க, நீர்வளத்துறை முன்வந்துள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமலாக்கத்துறை வழக்கால் மூடப்பட்ட குவாரிகளை அப்படியே விட்டு விட்டு, புதிய இடங்களில் குவாரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, திருவள்ளூர், வேலுார், விழுப்புரம், திருச்சி, அரியலுார், புதுக்கோட்டை, கரூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாமக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், கடலுார் ஆகிய, 13 மாவட்டங்களில், புதிய குவாரிகளுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த குவாரிகளுக்கான மணல் ஒப்பந்ததாரர்களை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. வழக்கு மற்றும் சர்ச்சையில் சிக்காத நபர்கள் வாயிலாக, இனி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். புதிய குவாரிகள் விரைவில் செயல்பட துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.