Close
ஜனவரி 30, 2025 5:37 மணி

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 39,938 பேர் பயன்..!

108 ஆம்புலன்ஸ்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 39938 பேர் பயன் அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 28 எண்ணிக்கையில், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 22 பேசிக் லைஃப் சப்போர்ட் வாகனங்களும், அதிநவீன மருத்தவ வசதிகளுடன் கூடிய 4 அட்வான்ஸ்ட் லைஃப் சப்போர்ட் வாகனங்களும், 2 இங்குபேட்டர், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய பச்சிளம் குழந்தை வாகனங்களும் செயல்பாட்டில் உள்ளன. இதில் நூற்றுக்கு மேற்பட்ட டிரைவர்களும், மருத்துவ உதவியாளர்களும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் 3,580 பேரும், பிப்ரவரி மாதத்தில் 3,023 பேரும், மார்ச் மாதத்தில் 3,128 பேரும், ஏப்ரல் மாதத்தில் 3,296 பேரும், மே மாதத்தில் 3,296 பேரும், ஜூன் மாதத்தில் 338 பேரும், ஜூலை மாதத்தில் 3,199 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 3,462 பேரும், செப்டம்பர் மாதத்தில் 3,489 பேரும், அக்டோபர் மாதத்தில் 3,495 பேரும், நவம்பர் மாதத்தில் 3,280 பேரும், டிசம்பர் மாதத்தில் 3302 பேரும், என மொத்தம் 39,938 பேர் 108 ஆம்புலன் வாகனத்தை பயன்படுத்தி பயனடைந்துள்ளனர்.

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 8,754 பேரும், விஷ மருந்து அருந்தியவர்கள் 2,168 பேரும், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 415 பேரும், அனிமல் அட்டாக் 879 பேரும், அடிதடி தகராறில் 2,400 பேரும், நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் 2,798 பேரும், சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1,147 பேரும், வலிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 1,165 பேரும், தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 2,082 பேரும்,

தீ காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 169 பேரும், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் 2,577 பேரும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1,461 பெரும், தற்கொலை முயற்சி 282 பேரும், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 2,989 பேரும், சுயநினைவின்றி இருந்தவர்கள் 1,719 பேரும், கர்ப்பிணி பெண்கள் 4,319 பேரும், பச்சிளங்குழந்தைகள் 452 பேரும்,

குழந்தைகள் 134 பேரும், மற்றவர்கள் 428 பேரும், என மொத்தம் 39938 பேர் கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டைக் காட்டிலும், 2024ம் ஆண்டில் 3733 பேர் அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.

பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ்:

நாமக்கல் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு என நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் வெண்டிலேட்டர், இன்குபேட்டருடன் கூடிய பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்களுடன், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய, 2 சிறப்பு பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் (நியூநேட்டல்) வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் வீடுகளில் இருந்து, பிறந்து 28 நாட்களுக்குள் ஆன பச்சிளங்குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர 108 என்ற இலவச அழைப்பை தொடர்பு கொண்டு, இலவசமாக இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, 108 ஆம்புலன் சேலம் மண்டல மேலாளர் அறிவுக்கரசு கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top