நாமக்கல் :
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு தமிழக எம்.பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர், நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசிடம், நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகள், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) அமல்படுத்த வேண்டியும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். மத்திய பாஜ அரசு இதுவரையிலும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்து வருகிறது.
2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ம் தேதி துவங்க உள்ளது. இது சம்மந்தமாக திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை 29ம் தேதி சென்னையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய பாஜ அரசு விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) அமல்படுத்தி, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை, நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் துவங்கும் முதல் நாளன்றே பார்லியில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் 40 பேரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
இதற்கும் மத்திய பாஜக அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழக எம்.பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தற்போது தொடங்கவுள்ள பார்லி கூட்டத் தொடர் முழுவதும் நடத்த விடாமல் முடக்க வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்களுக்கு தமிழக முதல்வர் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.