Close
ஜனவரி 31, 2025 6:52 காலை

மீண்டும் அத்துமீறும் கேரளா? என்ன செய்ய போகிறார் தமிழக முதல்வர்?

முல்லை பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் மீண்டும் கேரளா தங்கள் மாநில விஷமிகளை போராட அனுமதித்துள்ளது. அதனை எதிர்கொள்ள தமிழக முதல்வர் என்ன செய்ய போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை, குமுளியில் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தை கேரளாவின் ஜனநாயக உரிமை பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது. அதாவது மத்திய நீர்வள ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட புதிய முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு குழு அளித்த, தவறான தகவலின் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் அவதானித்திருக்கிறது.

இது தங்களை அச்சப்படுத்தும் நோக்கில் இருப்பதாக கருதிய ஜனநாயக உரிமை பாதுகாப்பு குழு, வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது பிப்ரவரி இரண்டாம் தேதி, குமுளியில் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.

கூடுதலாக இந்த நிகழ்வுகளுக்கு தலைமை தாங்க போகிறவர்களாக, தாமஸ் குகிஞ்சன் மற்றும் மேத்யூ ஸ்டீபன் ஆகியோரை முன்மொழிந்திருக்கிறது அந்த அமைப்பு.

இவர்களது கோரிக்கைகளாக…

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வேண்டும்…
சுரங்கம் அமைத்து தமிழகத்திற்கு தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும்…
இரண்டு மாநிலங்களுக்கு இடையே எழுந்திருக்கும் இந்த பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்…
பிரதான குழுவில் இடம் பெற்றிருக்கும் இரண்டு கேரள அதிகாரிகளை தக்க வைக்க வேண்டும்…
என பல கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள் ஜனநாயக உரிமை பாதுகாப்பு குழுவினர்…
ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்த போது…
அணை தொடர்பான தமிழகப் போராட்டக்காரர்கள் லோயர் கேம்ப்போடு நின்று விட வேண்டும் எனவும்…
கேரள போராட்டக்காரர்கள் வண்டிப்பெரியாரோடு நின்று விட வேண்டும் எனவும் ஒரு முடிவு எட்டப்பட்டது…

அதையும் மீறி கடந்த ஆண்டு சேவ் கேரளா பிரிகேட் அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் ரசல் ஜோய் குமுளி பேருந்து நிலையத்தில் வந்து பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போதே அதை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தட்டிக் கேட்டது.

அந்த அமைதி ஒப்பந்தத்தை இப்போது மறுபடியும் கேரள கும்பல் மீறுகிறது. கேரள போலீசும் இதுவரை குமுளியில் போராட்டம் நடத்த தடை எதுவும் விதிக்கவில்லை. இதனால் கேரள போலீஸ் அனுமதித்துள்ளதாக பெரியாறு பாசன விவசாயிகள் முடிவுக்கு வந்து உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்டதி வருகின்றனர்.

இந்நிலையில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்தக் காரணத்தைக் கொண்டும் குமுளி பேருந்து நிலையத்தை போராட்டக்காரர்கள் பயன்படுத்துவதற்கு இடுக்கி மாவட்ட காவல்துறை அனுமதிக்க கூடாது.

தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் குமுளி எல்லையில் ஆட்களை இறக்கி ஏற்றும் நிலையில், அங்கிருந்து 50 மீட்டர் தொலைவில் உண்ணாவிரதம் நடக்கும் என்றால்….. அது இரு மாநில உறவை சீர்குலைப்பதற்கு வழிவகுக்கும்.
அதையும் மீறி நாங்கள் அப்படித்தான் அனுமதி கொடுப்போம் என்று இடுக்கி மாவட்ட காவல்துறை முடிவு செய்யுமானால்….

அதே தேதியில் காலை பத்து முப்பது மணி அளவில் நாங்களும் குமுளி தமிழக எல்லையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கூடி… உச்ச நீதிமன்றத்தின் மாண்பை காக்க கோரி… நாங்களும் உண்ணாவிரதம் நடத்துவோம்.

தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க வேண்டுமானால் இடுக்கி மாவட்ட காவல்துறை கேரளத்து போராட்டக்காரர்களை வண்டிப்பெரியாறு தாண்டி அனுமதிக்க கூடாது… எனக்கூறியுள்ளார்.

அப்படி கேரளா அனுமதிக்குமானால், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கமும் எல்லை மீறும். இதனை முதல்வர் ஸ்டாலின் அனுமதித்து அதிரடிக்கு தயாராவாரா? அல்லது விவசாயிகளை லோயர்கேம்ப்பிலேயே தடுத்து அமைதி காப்பாரா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, தமிழக விவசாயிகளை சில நாட்கள் போராட அனுமதித்த பின்னரே அப்போதைய முதல்வர் ஜெ., கடிவாளம் போட்டார். இதனால் தான் ஜெ., இருந்தவரை கேரளா சற்று அடக்கியே வசித்தது. முதல்வர் ஸ்டாலினும் அதே பாணியில் சற்று அதிரடிக்கு தயாராவாரா?

அல்லது சட்டம், தர்மத்தினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கோர்ட் மூலமே பரிகாரம் தேட வேண்டும் என தமிழக விவசாயிகளை கண்டித்து அடக்கி வைப்பாரா? என தேனி மாவட்டத்தில் விவாதம் எழுந்துள்ளது. இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டாலும், தேனி மாவட்ட பொதுமக்கள் பலர், ‘‘முதல்வர் ஸ்டாலின் எப்போதும் நிதானம் தவற மாட்டார்.

எதிராளிகள் அதாவது கேரள போராட்டக்குழுவினர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் எந்த அதிரடிக்கும் தயாராக மாட்டார். தமிழக விவசாயிகளை லோயர்கேம்ப்பிலேயே தடுத்து அமைதி காக்கவே அறிவுறுத்துவார். ஏற்கனவே பெரியாறு அணை பிரச்னையில் தமிழகம் சட்ட ரீதியாக பெரிய அளவில் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் நிச்சயம் அமைதியான சட்ட வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்துவார் என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். பிப்., 2 வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top