Close
ஜனவரி 31, 2025 7:12 காலை

பிளாஸ்டிக் விழிப்புணர்வு தூய்மைப்பணி : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வினை காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கிவைத்தார்

தமிழ்நாடு அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களை ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும் முன்னிலை வகித்து வருகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி மாதந்தோறும் ஒருநாள் நடைபெற வேண்டி அரசாணை (அரசாணை எண் : 189 சுற்றுச்சூழல்,காலநிலை மற்றும் வனம் ., நாள் : 01.11.2024) வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் சர்வத் தீர்த்த குளம், குன்றத்தூர் நகராட்சியில் பொன்னியம்மன் கோவில் குளம், மாங்காடு நகராட்சியில் பட்டூர் தந்தி கால்வாய் மற்றும் ஊராட்சிகளில் உள்ள நீர்நிலை பகுதிகளில் இந்த மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு முகாம் இன்று துவங்கியது.

இந்நிகழ்வினை காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளக்கரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு குளம் மற்றும் கரைகளில் இருந்த கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் மற்றும் வியாபார பெருமக்கள் அனைவரும் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து அதற்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்துமாறு இந்நிகழ்வில் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பல்லவன் மருந்தியல் கல்லூரி, எஸ் எஸ் கே வி பெண்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நீர்நிலைகளை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் இது குறித்த விழிப்புணர் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top