Close
பிப்ரவரி 2, 2025 8:00 காலை

கன்னியாகுமரியில் படகு பயணம் செய்ய நவீன மென்பொருள் ரெடி

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு டிக்கெட் எடுப்பதற்கு இருக்கும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முழுவதுமாக  ஆன்லைன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குமரி மாவட்ட ஆட்சியர்  அழகுமீனா தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் கண்ணாடி கூண்டு பாலத்தை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இந்த படகு போக்குவரத்தினை நடத்தி வருகிறது.

தினமும் பல ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து குவிவதால் படகு பயணத்திற்கு டிக்கட் எடுக்க நீண்ட வரிசை காணப்படுகிறது. சில சமயங்களில் 2 மணி முதல் 5 மணி நேரம் வரை சுற்றுலா பயணிகள் கியூ வரிசையில் காத்து நிற்க வேண்டியுள்ளது. இதனால் முதியோர் குழந்தைகள் மாணவ மாணவியர்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

அது போன்று சன்னதி தெரு, ரத வீதி, வாவத்துறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இது குறித்து கன்னியாகுமரி வந்த மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கூறியதாவது:

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக மும்முரமாக செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு தொழில் நுட்பத் துறையின் மூலமாக மென்பொருள் தயாரிக்கும்  பணி நடைபெற்று வருகிறது.  இந்த இந்தப் பணி நிறைவு பெற்றதும் ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாச்சல்பதி கோவிலில் இருப்பதை போன்று நேரம் குறிப்பிட்டு டிக்கட் வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் பயணிகள் வந்து படகு பயணம் மேற்கொள்ளலாம்.

பகுதி பகுதியாக சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியும். அவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி தர முடியும் இதன் காரணமாக பெரும் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும். வரிசையில் நீண்ட நேரம் காத்து நிற்பதையும் தவிர்க்க முடியும்.  இதற்கான பணிகள் நடந்து வருகிறது இதனை மிக குறைந்த காலத்தில் அமல்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top