Close
பிப்ரவரி 23, 2025 4:48 மணி

குமுளியில் மீண்டும் அதகளம்! டென்ஷனில் தமிழக காவல்துறை

பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுயிக் பாலசிங்கம்.

கேரள காவல்துறை அனுமதியுடன் கேரள போராட்ட கும்பல் அத்துமீறியதால், தமிழக விவசாயிகள் குமுளியில் முற்றுகை போராட்டத்திற்கு வரிந்து கட்டி தயாராகி வருகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம், பெரியாறு அணை பிரச்னையில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் பொங்கி எழுந்தனர். ஒரு மாதத்திற்கும் மேல் நடந்த போராட்டத்தால் கேரளா நடுநடுங்கிப்போனது.

அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவே, பெரியாறு பாசன விவசாயிகளின் ஆவேசத்தை கண்டு அதிர்ந்து போனார். அப்படி ஒரு கடுமையான போராட்டத்தை தமிழக விவசாயிகள், குறிப்பாக பெரியாறு பாசன பகுதியில் வசிக்கும் தேனி மாவட்ட விவசாயிகள் நடத்திக் காட்டினர்.

அதன் பின்னர் கேரளா சற்று அடக்கியே வாசித்து வந்தது. அப்போது தமிழக- கேரளா போலீசார் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது, தமிழக விவசாயிகள் போராடினால் லோயர் கேம்ப்பினை தாண்டி வர அனுமதிக்க கூடாது. கேரளாவில் போராட்டம் நடந்தால் வண்டிப்பெரியாரினை தாண்டி வரக்கூடாது என முடிவு செய்தனர்.
அதன்படியே தமிழக விவசாயிகள் இதுவரை அமைதியுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் கேரளா கும்பல் குமுளியில் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். கேரள கும்பல் 10 பேர் வரை குமுளியில் கேரள எல்லைக்குள் உள்ள கேரள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நின்று போராட்டம் நடத்திச் சென்றுள்ளனர். கேரள போலீசாரே ஒப்பந்தத்தை மீறி கேரள போராட்டக்கும்பலை போராட அனுமதித்தது தமிழக விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம், ‘கேரள அரசு, கேரள போலீசாரின் அத்துமீறலை கண்டித்து குமுளியில் அதாவது தங்களின் போராட்ட எல்லையான லோயர் கேம்ப்பினை தாண்டி, குமுளியில் வரும் 8ம் தேதி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்’.

இந்த அறிவிப்பு தமிழக காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் பெரியாறு விவசாயிகளின் கோரிக்கையில் நூறு சதவீதம் சரியான காரணம் உள்ளது. தவிர கேரள காவல்துறையினரே தவறும் செய்து விட்டனர். இதனால் தமிழக காவல்துறை தங்களை எல்லை தாண்டி போராட அனுமதிக்க வேண்டும் இல்லையேல் அத்துமீறி செல்வோம் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனால் தமிழக காவல்துறையினர் கடும் டென்சனில் உள்ளனர். தமிழக விவசாயிகள் குமுளியினை முற்றுகையிட்டால் எதிர்கொள்ள கேரள காவல்துறையும் அதிகளவில் போலீசாரை குமுளியில் குவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top